UP Crime: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவமானப்படுத்தப்பட்டதால், 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுவன் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி பகுதியில் பிறந்தநாள் விழாவில் அவமானப்படுத்தப்பட்டதால் 17 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அவர் மீது சிறுநீர் கழிக்கப்பட்டதாகவும் சிறுவனின் மாமா குற்றம் சாட்டியுள்ளார். புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், ஆனால் அங்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வழக்குப்பதியாத காவல்துறை?
உயிரிழந்த சிறுவனின் மாமா சம்பவம் தொடர்பாக பேசுகையில் பேசிய குடும்பத்தினர், “நாங்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது, எங்கள் புகார் பதிவு செய்யப்படவில்லை. டிசம்பர் 20 ஆம் தேதி சம்பவம் நடந்தது, டிசம்பர் 21 அன்று எங்களுக்குத் தெரியவந்தது.
சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வீட்டிற்கு வந்த சிறுவன், மறுநாள் காலையில் எங்களிடம் முழு விஷயத்தையும் சொன்னான். சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் எங்கள் அழுகை யாருக்கும் கேட்கவில்லை. புகாரை ஏற்கவில்லை. தாக்கிய நபர்கள் மீண்டும் சந்தித்து சித்திரவதை செய்தார்கள், அதன் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான்" என தெரிவித்தனர்.
காவல்துறை விளக்கம்
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டார அலுவலர் பிரதீப் குமார் திரிபாதி தெரிவித்தார். "சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் கப்டங்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு காரணம் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் என்று சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
15 வயது சிறுவன் தற்கொலை
இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தனது பிறந்தநாளில் 15 வயது சிறுவன் தனது தாய் செல்போன் தர மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிராஜ் நகரில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரது தாயும் சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இவர், தனது தாயாரிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். சில நிதிப் பிரச்சனைகளால் அவர் வாங்கி தர மறுத்தார். மறுநாள் சிறுவனின் குடும்பத்தினர் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.