திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் அருகில் சமுத்திரம் கிராமத்தில் ஆசிரியர் நகர் தெருவில் வசித்து வருபவர் அசோகன். இவருடைய மனைவி சித்ரா வயது (50), இவர் தனது வீட்டை பூட்டிக்கொண்டு கடந்த வாரம் 16 தேதி செங்கம் பகுதியில் உள்ள அவருடைய உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு இடையில் இரண்டு நாட்கள் வீட்டிற்கு வந்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சித்தாராவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் சித்ரா இருப்பார் என குரல் கொடுத்து பார்த்துள்ளனர். ஆனால் வீட்டிலிருந்து யாரும் பதிலுக்கு குரல் கொடுக்காததால் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக சித்ராவுக்கு தகவல் அளித்துள்ளனர்.
வீட்டில் பீரோ உடைத்து நகை கொள்ளை
உடனடியாக சித்ரா செங்கத்தில் இருந்து வேகவேகமாக வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 17 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுக்கா காவல்நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த தாலுக்கா காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் சாவகாசமாக வீட்டில் சமையலறையில் டீ போட்டு குடித்து விட்டு நகைகள் கொள்ளையடித்து சென்றனர்.
பல்வேறு இடங்களில் கொள்ளை
மேலும் காவல்துறையின் துப்பறியும் நாய் மியாவ் கொண்டுவரப்பட்டு மோப்பம் பிடித்து மியாவ் அருகிலுள்ள இரண்டு தெருக்களை சுற்றி வந்து முட்புதர் அருகில் சென்று நின்றது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதே போன்று இரண்டு தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சாவுகாசமாக சென்று மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 80 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு குத்து விளக்கு மற்றும் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கர்களை கொள்ளை அடித்து சென்றுள்ளதும் தெரியவந்தது.
அதேபோல் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் கொள்ளையன் சாவகாசமாக கொள்ளையடித்து சென்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கிராமத்தில் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.