பாமகவை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாமகவின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணித் தலைவராக செயல்பட்டு வந்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்கரவர்த்தி (48). நேற்று இரவு தலையில் காயங்களுடன் சக்கரவர்த்தி சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா ? விபத்தா ?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சக்கரவர்த்தி வழக்கறிஞர் பணி செய்து வந்தார். இருசக்கர வாகனத்தில் இரவில் வீடு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா ? அரசியல் அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல் தெரிவித்த வழக்கறிஞர் பாலு
இதுகுறித்து வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை சேர்ந்த பாலு தனது முகநூல் பதிவில், சக்கரை எங்களை விட்டு மறைந்தாயே உன் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்வோம். சர்க்கரை என்று செல்லமாக அழைக்கும் சோளிங்கர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி நள்ளிரவில் திடீர் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். சோளிங்கர் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக இளைஞரணி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்த பன்முகத்தன்மை கொண்ட என் ஆருயிர் சகோதரர் வழக்கறிஞர் சக்ரவர்த்தி
நான் நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டபோது எனக்காக கடுமையாக தேர்தல் பணியாற்றிய முதல் களப்போராளி அவரது தேர்தல் பணி இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது சமூக நீதிப் பேரவையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர் சமீபத்தில் தான் அவரது தாய் மறைந்தார், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சமூக நீதிப் பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது என பதிவு செய்துள்ளார்.