டெல்லியில் கடந்த மாதம் உறவினர் உட்பட மூன்று நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதுடன் கொடூர தாக்குதலுக்கு ஆளான 10 வயது சிறுவன் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில், சம்பந்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் 10 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.


வடகிழக்கு டெல்லியின் நியூ சீலம்பூர் பகுதியில் வசிப்பவர்கள். கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை நினைவுபடுத்தும் அளவுக்கு சிறுவனின் காயங்கள் மிகவும் கொடூரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.


எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் இருந்து கடும் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 10 வயதுடைய ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 22ம் தேதி சீலம்பூர் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பெற்றோரை சந்தித்தது. ஆனால், அவர்கள் வாக்குமூலம் கொடுக்க மறுத்துவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.


அப்போது குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருந்தது. இந்த நிலையில் பெண் ஒருவரிடம் இருந்து தனது மகனின் அந்தரங்க உறுப்புகளில் கம்பியை சொருகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக டெல்லி மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. நான்கு நாட்களாக குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வராததால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


செப்டம்பர் 24 ஆம் தேதி வரை குடும்பத்தினர் வாக்குமூலம் அளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு காவல்துறையினர் மருத்துவ ஆலோசனையை ஏற்பாடு செய்திருந்தனர். அதில்தான், தன்னுடைய மகன் அவரது நண்பர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதையும் ஒப்பு கொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் கடன் வாங்கியதாகவும் சரியான நேரத்தில், அதை திருப்பி செலுத்தாததால் இப்படி செய்ததாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.


இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றங்கள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தனது மகனை செங்கல் மற்றும் கம்பிகளை கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாக சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய இரண்டு சிறுவர்கள், உறவினர் உட்பட, கைது செய்யப்பட்டு சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் போலீசார் மூன்றாவது சிறுவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.