தமிழகத்தில் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் மீட்டிங் செயலியான ஜூம் ஆப்பின் பங்குகள் கடும் சரிவைக் கண்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையே மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஆன்லைனில் வகுப்புகளும் நடத்தப்பட்டன. அலுவலகங்களிலும் ஜூம் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஏன் திருமணங்களைக் கூட ஜூம் ஆப்பில் லைவ் டெலிகாஸ்ட் செய்யத் தொடங்கினர் மக்கள். அரசு அலுவலகங்களிலும் ஜூம் பயன்பாடு அதிகரித்தது. ஜூம் ஆப் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல ஆகையால் மத்திய அரசு ஊழியர்கள் உயர் மட்ட ஆலலோசனைகளுக்கு ஜூம் ஆப்பை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே கொரோனா தொற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகளை திறந்து செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்குமான நேரடி வகுப்புகள் தொடங்கின. அதேபோல் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் இருந்து பல்வேறு அலுவலகங்களும் நேரடியாக இயங்கத் தொடங்கிவிட்டன.




பயன்பாடு குறைந்தது ஏன்?
பள்ளிகளின் அனைத்து மாணவர்களுக்குமே கடந்த மாதம் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்திவந்தன. இதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஜூம் ஆப்பையே பயன்படுத்தின. சில பள்ளிகள் கூகுள் மீட் பயன்படுத்தினாலும் கூட ஜூம் செயலி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினர் இடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனால், ஜூம் ஆப்பை நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்தனர். ஒரு வகுப்புக்கு ஒரு நாள் குறைந்தது 5 மணி நேரமாவது ஆன்லைன் க்ளாஸ் நடத்தப்பட்டது. இப்போது, 9, 10, 11, 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிவிட்டதால் மற்ற வகுப்புகளுக்கு மட்டுமே ஆன்லைன் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால், ஜூம் ஆப் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.


அலுவலகம் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், ஆலோசனைக் கூட்டங்கள், ரிவிவ்யூ மீட்டிங்கள் என அனைத்தும் அலுவலங்களிலேயே நடக்கத் தொடங்கிவிட்டன. இதனால் அலுவலக ரீதியாகவும் ஜூம் ஆப் பயன்பாடு குறைந்துவிட்டது.




திடீர் சரிவை சந்தித்த ஜூம்..


ஜூம் பயன்பாடு குறைந்த நிலையில், நேற்று பங்குச்சந்தையில் இதன் பங்கு கடந்த 9 மாதங்களாக இல்லாத அளவிற்கு மிக மோசமாக சரிந்தது. ஒரு பங்கின் விலை 289.50 டாலராக முடிவடைந்தது. கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதத்தில்  விண்ணைத் தொட்ட ஜூம் செயலின் பங்கு அக்டோபரில் 175 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அதில் இருந்து பாதியாகக் குறைந்துள்ளது. சந்தை சரிவு புதிய உச்சத்தில் இருந்தாலும் கூட இத்தனை மாத கால பயன்பாட்டால் நடப்பு காலாண்டு நிதியாண்டில் ஜூம் செயலின் வருமானம் 1.015 பில்லியன் டாலரில் இருந்து 1.020 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். ஆனால், நேற்றைய பங்கு விலை சரிவு அந்நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.