இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது சொமாட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகியவைதான். இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி மட்டும் இல்லாமல் தற்போது மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்து வருகின்றன. தொடக்கத்தில் இந்த நிறுவனங்களில் இந்தியாவில் கணிசமான அளவே உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் இணையம் வளர வளர இந்தியாவில் 24 மணி நேரமும் இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் சொமாட்டோ நிறுவனத்திற்கு சுமார் 58  மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சுமார் 647 மில்லியன் ஆர்டர்கள் செய்துள்ளனர்


விழாக்காலங்களில் வீடுகளில் உணவு சமைத்து சாப்பிடும் பழக்க வழங்கள் வெகுவாகக் குறைந்து தற்போது டெலிவரி செயலிகளில் ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் விழாக்காலங்களில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஆர்டர்களை டெலிவரி செய்வதற்குள் திக்கு முக்காடிவிடுவர். அதிலும், போக்குவரத்து நெரிசல் நிறைந்த மெட்ரோ நகரங்கள் தொடங்கி வளர்ந்து வரும் நகரங்கள் வரை உணவு டெலிவரி ஊழியர்கள் உணவினை டெலிவரி செய்வதற்குள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். 






இந்த உணவு டெலிவரி ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் தகுந்த விடுப்பு அளிப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இன்று வரை இருக்கின்றது. அதேநேரத்தில் வார இறுதி நாட்கள், விழாக்கால நாட்கள் என மிகவும் முக்கியமான நாட்களில் உணவு டெலிவரி நிறுவனங்களோ குறைந்த ஆர்டர் டெலிவரி செய்தால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தினை உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பயன்படுத்தும் டெலிவரி செயலியில் அடிக்கடி பாப் - அப் செய்து ஊழியர்கள் மனதில் விழாக்காலத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கி விடுகின்றனர். 


இப்படியான நிலையில், சொமாட்டோ உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மாலை, அதாவது புத்தாண்டுக்கு முந்தைய மாலையில், உணவு ஆர்டர் செய்தவர்கள் உணவு டெலிவரி செய்த டெலிவரி ஊழியர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு டிப்ஸ் அளித்துள்ளனர். டிப்ஸ் அளிப்பவர்கள் உணவு ஆர்டர் செய்யும்போதும் கொடுக்கலாம், அல்லது உணவு டெலிவரி செய்யும்போதும் கொடுக்கலாம். ஆர்டர் செய்யும்போது டிப்ஸ் கொடுத்தால் அது டெலிவரி ஊழியாரின் வங்கிக் கணக்கிற்கு டெலிவரி நிறுவனம் மூலம் செலுத்தப்படும். இதுமட்டும் இல்லாமல், உணவு டெலிவரி செய்யும்போது ஊழியர்களிடம் நேரடியாக கொடுத்தால் கூட அதனை ஊழியர்கள் தங்களது உணவு டெலிவரி செயலியில் குறிப்பிடமுடியும். 


இப்படியாக டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதல் இரவு வரை உணவு டெலிவரி ஊழியர்களுக்கு, இந்தியா முழுவதும் உள்ள சொமாட்டோ வாடிக்கையாளர்கள் மொத்தம் ரூபாய் 97 லட்சம் டிப்ஸாக கொடுத்துள்ளனர். இதனை சொமாட்டோ நிறுவனத்தின்  உயர்மட்ட ஊழியர்களில் ஒருவரான தீபந்தர் கோயல், "லவ் யூ இந்தியா! தற்போதுவரை 97 லட்ச ரூபாயை டிப்ஸ் ஆக கொடுத்து இருக்கிறீர்கள், டெலிவரி பார்ட்னர்கள் தொடர்ந்து டெலிவரி செய்து வருகின்றனர் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.