சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும், சிறைத்தண்டனை வழங்கியதாலும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பொன்முடி தனது பதவியை கடந்தாண்டு இறுதியில் இழந்தார். இந்த வழக்கில் அவரது தண்டனையை ஒரு மாதம் நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்த நிலையில், இன்று பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


சொத்துக்குவிப்பு வழக்கு:


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் பொன்முடி. இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இந்த நிலையில், அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து குவித்தாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த 2016ம் ஆண்டு இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறைத்தண்டனை:


இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதையடுத்து, கடந்த டிசம்பர் 21ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தலா ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனைக்கு ஆளான பொன்முடி தனது உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை இழந்தார். பொன்முடி குற்றவாளி என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அவருக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


மேல்முறையீடு:


இந்த சூழலில் இன்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் அவருக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் பொன்முடியும், அவரது மனைவியும் சிறை செல்வது தவிர்க்கப்படும். தண்டனை காலத்தை நிறுத்தி வைக்க அளிக்கப்பட்ட ஒரு மாத காலத்தை கடந்தும் விசாரணை நடைபெற்றாலும் அவர்கள் இருவரும் சிறைக்கு செல்வது உறுதியாகும்.


மூத்த அரசியல்வாதியும், தி.மு.க.வின் அமைச்சரவையில் முக்கிய அங்கமாக இருந்த பொன்முடி பதவியை இழந்து சிறைக்குச் செல்லும் நிலையில் இருப்பது தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.