இந்தியாவின் முன்னணி ஊடக மற்றும் திரையுலக நிறுவனங்களில் ஒன்றாக செயல்படுவது ஜீ நிறுவனம். வட இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், தென்னிந்தியாவில் தமிழ் உள்பட சில மொழிகளில் ஜீ தொலைக்காட்சி இயங்கிவருகிறது. இவர்களது ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜீ நிறுவனத்தினர் ஜீ என்டர்டெயின்மெண்ட்ஸ் என்டர்பிரைசர்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  


இந்த நிலையில், ஜீ என்டர்டெயின்மெண்ட்ஸ் என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.




இந்த கூட்டத்தில், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைஸ் நிறுவனத்தை இணைப்பதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. சோனி பிக்சர்ஸ் மற்றும் ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசர்ஸ் இணைக்கப்பட்ட பிறகு, இந்த நிறுவனம் இந்தியாவில் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருக்கும்.


சோனி பிக்சர்ஸ் மற்றும் ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசர்ஸ் இணைந்த பிறகு அதற்கு மேலாண் இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் புனித் கோயங்கா தொடர உள்ளார். கால அட்டவணைப்படி நிறுவன உரிமையாளரின் குடும்பம் அதன் பங்குதாரர்களை தற்போதைய 4 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை சட்டத்திற்கு உட்பட்டு அதிகரித்துக் கொள்ளப்பட உள்ளது. இணைக்கப்பட நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் பெரும்பாலானோர்கள் சோனி குழுமத்தால் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.




சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் கல்வர்சிட்டியில் இயங்கி வருகிறது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருகிறது.


தொழில்துறை நிபுணர்கள் சோனி பிக்சர்சுடன் இணைவதற்கு ஜீ என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைஸ் நிறுவனம் எடுத்துள்ள முடிவு மிகவும் நல்ல முடிவு என்றும், இதன்மூலம் இரு நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் என்றும், இணைக்கப்பட்ட நிறுவனம் ஒரு முக்கிப் பங்காற்றும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். ஜீ நிறுவனமும், சோனி நிறுவனமும் இணைய உள்ளதாக எடுக்கப்பட்ட இந்த முடிவால் பங்குச்சந்தைகளில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 


600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக நீக்கியது அமேசான்: ஏன் தெரியுமா?