2021-ம் ஆண்டிலும் கோவிட்டின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் ஸ்டார்ட் அப்களில் செய்யப்படும் முதலீடுகள் குறையவில்லை. 2021-ம் ஆண்டில் 36 பில்லியன் டாலர் அளவுக்கு ஸ்டார்ட் அப்களில் முதலீடுகள் வந்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே முதலீடு வந்துள்ள நிலையில் தற்போது 36 பில்லியன் டாலர் வந்துள்ளது. 1,300க்கும் மேற்பட்ட டீல்கள் 2021-ம் ஆண்டு நடந்துள்ளன. சராசரியாக ஒரு முதலீட்டில் 3.2 கோடி டாலர் அளவுக்கு முதலீடுகள் வந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
டைகர் குளோபல், பல்கான் எட்ஜ், செக்யோயா கேபிடல், ஆக்செல், புளும் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கணிசமான முதலீட்டை செய்திருக்கின்றன.
42 யுனிகார்ன் நிறுவனங்கள்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக முதலீடு வந்திருப்பதால் இந்த ஆண்டும் மட்டும் 42 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டி இருக்கின்றன. 100 கோடி டாலர் சந்தை மதிப்பை தொட்ட நிறுவனங்களை யுனிகார்ன் என்று சொல்லப்படும். 2020-ம் ஆண்டு 11 நிறுவனங்கள் மட்டுமே எட்டியுள்ள நிலையில் தற்போது 42 நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டியுள்ளன. தற்போது சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவில் மட்டுமே இந்தியாவை விட அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இங்கிலாந்தில் இருப்பதை விட இந்தியாவில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு 254 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகின. இதன் மூலம் மொத்த யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 487 ஆக இருக்கிறது. சீனாவில் மொத்த யுனிகார்ன்களின் எண்ணிக்கை 301 ஆக இருக்கிறது. உலகில் உள்ள மொத்த ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையில் 74 சதவீதம் இந்த இரு நாடுகளில் இருக்கிறது. மூன்றாவதாக இந்தியாவில் மொத்தம் 59 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சுமார் 65 யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை பெங்களூருவில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஜனவரி 15-ம் தேதி டிஜிட் என்னும் நிறுவனம் யுனிகார்ன் நிலையை எட்டியது. 2021-ம் ஆண்டு தொடங்கி அதே ஆண்டில் யுனிகார்ன் நிலையை எட்டியது மென்ச்சா பிராண்ட்ஸ் என்னும் நிறுவனம். 37 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பைவ் ஸ்டார்ட் பிஸினஸ் என்னும் நிறுவனமும் 2021-ம் ஆண்டு யுனிகார்ன் நிலையை எட்டியது. 2021-ம் ஆண்டு மட்டும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
ஏழு பின் டெக் நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டியது. குரோவ், க்ரெட், பார்த்பே, மொபிக்விக், அப்ஸ்டாக்ஸ் உள்ளிட்ட பைனான்ஸியல் டெக்னாலஜி நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டியுள்ளன. எஜுடெக் பிரிவில் பைஜூஸ் நிறுவனம் 21 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில் உள்ளது. சர்வதேச அளவில் 15வது இடத்தில் பைஜூஸ் இருக்கிறது. டைரக்ட் டு கஸ்டமர், பிஸினஸ் டு பிஸினஸ், டெக்னாலஜி, உணவு, ஹெல்த்கேர் என ஒவ்வொரு துறையிலும் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டியுள்ளது. வருமானமே இல்லாத அப்னா நிறுவனமும் யுனிகார்ன் நிலையை எட்டி இருக்கிறது.
ஸ்டார்ட் அப் ஐபிஓ
இதுவரை வென்ச்சர் கேபிடல் நிதி மட்டுமே பெற்றுவந்த ஸ்டார்ட் அப்கள், இந்த ஆண்டு ஐபிஓவை வெளியிட்டன. முதலாக ஜொமோட்டோ நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. இதனை தொடர்ந்து பேடிஎம், நய்கா, பாலிசிபஸார் உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது.
ஏற்கெனவே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தைரோகேர் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பார்ம் ஈஸி நிறுவனம் கையகப்படுத்தியது 2021-ம் ஆண்டு நடந்த முக்கியமான நிகழ்வாகும். டாடா குழுமம் 1எம்ஜி, பிக்பாஸ்ட்கட் நிறுவனங்களை கையகப்படுத்தியது. இதுதவிர ரிலையன்ஸ், பிளிப்கார்ட், பைஜூஸ், பார்த்பே, அமேசான் ஆகிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை இணைத்துக்கொண்டன.
மேலும் பல ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் சொத்துமதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறது. பாரத்பே நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான சஸ்வத் நகரனியின் சொத்து மதிப்பு 1000 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இவரின் வயது 23. 2021-ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பொருத்தவரை முக்கியமான ஆண்டு என்பது சந்தேகமில்லை. பல மாற்றங்கள், வெற்றியாளர்களை இந்த ஆண்டு உருவாக்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஸ்டார்ட் அப் உலகம் எப்படி இருக்கப்போகிறது என்னும் ஆர்வம் இப்போதே உருவாகி இருக்கிறது.