இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், உலகின் புகழ்பெற் கோடீஸ்வரர்களில் ஒருவருமானவர் ரத்தன் டாடா. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்திய மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் ரத்தன் டாடா. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி என இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
டாடா குழுமம்:
100க்கும் மேற்பட்ட நாடுகளில் 30க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நிறுவனங்களை நிர்வகித்து வரும் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ள ரத்தன் டாடாவின் ஊதியம் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்தின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 403 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது, இந்திய மதிப்பில் ரூபாய் 33.7 ட்ரில்லியன் ஆகும்.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா கடந்த 1991ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்துள்ளார். மேலும், இடைக்கால தலைவராக கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜனவரி வரை பொறுப்பு வகித்துள்ளார்.
ரத்தன் டாடா சம்பளம் என்ன?
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ரத்தன் டாடா தனது ஆண்டு வருமானமாக டாடா குழுமத் தலைவராக பொறுப்பு வகித்தபோது ரூபாய் 2.5 கோடியை ஆண்டு வருமானமாக பெற்றுள்ளார். மாத வருமானமாக ரூபாய் 20.83 லட்சம் பெற்றுள்ளார். தினசரி அவரது ஊதியம் ரூபாய் 70 ஆயிரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 2 ஆயிரத்து 900 ஊதியமாக ரத்தன் டாடாவிற்கு கிடைத்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 49- 50 வருவாயாக ஈட்டியுள்ளார்.
முகேஷ் அம்பானி, அதானி போன்ற மிகப்பெரிய கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது ரத்தன் டாடாவின் ஊதியம் மிகவும் குறைவாகவே இருக்கும். அம்பானிக்கு ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 3 லட்சம் வருவாயாக கிடைக்கிறது. ரத்தன் டாடாவின் ஊதியம் மற்ற கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதற்கு காரணம் அவர் தன்னுடைய வருவாயில் பெரும் பங்கை மருத்துவம், கல்வி, வளர்ச்சி போன்றவற்றிற்கும் ஏராளமான அறக்கட்டளைக்கும் செலவிட்டு வந்ததே காரணம் ஆகும்.
அனைத்து தொழிலும் சாம்ராஜ்யம்:
சமீபத்தில் வெளியான தகவலின்படி, ரத்தன் டாடாவின் பெயரில் மட்டும் சொத்து மதிப்பு ரூபாய் 3 ஆயிரத்து 800 கோடி இருந்ததாக கூறப்படுகிறது. ரத்தன் டாடா தான் இறக்கும் வரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து விட்டார்.
வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள், வாகன உற்பத்தி, மென்பொருள், ஹோட்டல்கள் என டாடா நிறுவனம் கால்தடம் பதிக்காதே துறையே இல்லை என்று சொல்லலாம். டாடா மோட்டார்ஸ். டி.சி.எஸ்., டாடா பவர்ஸ், வோல்டாஸ், ஜாக்குவார் கார், இந்தியன் ஹோட்டல்ஸ், ஏர் இந்தியா, க்ரோமா என டாடாவின் நிறுவனங்கள் அனைத்துமே புகழ்பெற்றது ஆகும். அனைவருக்கும் கார் என்ற இலக்குடன் டாடா நிறுவனம் ஒன்றரை லட்சம் ரூபாய் Nano காரை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. டாடாவின் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.