Pigeons Robbery: பெங்களூருவில் புறாவை பயன்படுத்தி அடுத்தடுத்து கொள்ளையடித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சிக்கிய கொள்ளையன்:


புறாக்களை பயன்படுத்தி பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த "பரிவாள மஞ்சா" என்றழைக்கப்படும் மஞ்சுநாத் என்ற 38 வயது நபரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடும் பழைய பாணிக்கும்  இது ஒரு புதிய தந்திரமாக உள்ளது. மஞ்சுநாத் புறாக்களை வளர்த்து, பின்னர் அவற்றின் உடலில் டிரான்ஸ்மீட்டர் சாதனத்துடன் இணைக்கப்பட்ட சிறிய கேமராவை பொருத்தியுள்ளார். அதன் மூலம், பூட்டிய வீடுகளை கண்காந்த்து கொள்ள சம்பவங்களில் இடுபட்டு வந்துள்ளார்.  நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.


புறா மூலம் கொள்ளை திட்டம்:


மஞ்சுநாத்தின் புறா வியூகம் ஒரு தனித்துவமான மற்றும் ஆச்சரியமான பாணியைக் கொண்டிருந்தது. கொள்ளயடிக்க செல்லும்போது ஒன்று அல்லது இரண்டு புறாக்களைக் கொண்டு செல்வார். அவர் பறவைகளை விடுவித்தவுடன், அவை பெரும்பாலும் கூரை அல்லது பால்கனியில் தரையிறங்கும். அப்போது புறாக்களின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கேமரா வழியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளார். யாராவது அவரிடம் விசாரித்தால், தனது புறாக்களை பிடிக்க முயற்சிப்பதாக கூறி தப்பித்துள்ளார்.


கொள்ளையடிப்பது எப்படி?


கொள்ளையடிக்க ஏற்ற இடத்தை உறுதி செய்த பிறகு,  பூட்டியிருக்கும் வீட்டின் முன்பக்கக் கதவை இரும்புக் கம்பியைக் கொண்டு உடைத்து உள்ளே செல்வதை மஞ்சுநாத் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். உள்ளே நுழைந்ததும் அலமாரி மற்றும் பீரோக்களை குறிவைத்து, தங்க நகைகள் மற்றும் பணம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை திருட் வந்துள்ளார். அவர் முதன்மையாக பாதுகாப்பு பணியாளர்கள் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகள் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மஞ்சுநாத்திடம் இருந்து, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 475 கிராம் தங்கம், ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தொடர் குற்றச்சம்பவங்கள்:


மஞ்சுநாத் இதற்கு முன் பலமுறை கைது செய்யப்பட்டாலும், ஜாமினில் வெளியே வந்து மீண்டும் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். வேலைக்குச் செல்பவர்களை நோட்டமிட்டு, பட்டப்பகலிலேயே கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதன் மூலம், சிட்டி மார்க்கெட் மற்றும் அல்சூர் கேட் பகுதிகளில் நடந்த நான்கு திருட்டு வழக்குகளை போலீசார் முடித்து வைத்துள்ளனர்.


போலீசார் சொல்வது என்ன?


புறாக்கள் மூலம் இலக்குகளைக் கண்டறிவதற்கான மஞ்சுநாத்தின் விவேகமான நுட்பம்,  பிரத்தியேகமாக அவருக்கு சொந்தமானது என்றாலும், அது அவரை சிறை தண்டனை பெறுவதில் இருந்து காப்பாற்றவில்லை. இந்த தொடர் குற்றங்களை உறுதிப்படுத்துவதன் மூலம், அவர் நீண்ட தண்டனையை அனுபவிக்கக்கூடும் என காவல்துறை தெரிவித்துள்ளது.  இதனால் அவரது குற்றங்கள் தடுக்கப்பட்டதோடு, மக்களிடமிருந்து திருடப்பட்ட இன்னும் அதிகமான பொருட்கள் மீட்கப்படும் எனவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.