இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை அடுத்த ஆண்டு மே மாதம் முதல் நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் நிறுத்துகிறது என்பதை பார்ப்பதற்கு முன்பு இ-காமர்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு விதிமுறைகளை ஒருமுறை பார்ப்போம். அப்போதுதான் இந்த சிக்கல் முழுமையாக புரியும்.
இ-காமர்ஸ் நிறுவனங்களில் அந்நிய முதலீடு அதிகமாக இருக்கும்போது அவர்களால் பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்க முடியாது. அதேபோல அவர்களின் தளத்தில் விற்பனை செய்யும் நிறுவனங்களிலும் பங்குகளை வைத்திருக்க முடியாது. அந்நிய முதலீடு அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்களால் இணையதளத்தை நிர்வகிக்க முடியுமே தவிர பொருட்களை வாங்கி விற்க முடியாது. ( நய்கா என்னும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமும் இ-காமர்ஸ் தளம்தான். ஆனால் அதில் 51 சதவீதம் பங்குகள் இந்தியர்களுடையது என்பதால் அவர்களால் பொருட்களை வாங்கி விற்க முடியும்)
அதாவது விற்பனை செய்யும் நிறுவனங்களை பட்டியலிட முடியுமே தவிர, அமேசான் நிறுவனமே விற்பனையாளராக மாற முடியாது. இந்த விதிமுறையை மறைமுகமாக கையாளப்பட்டது. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியுடன் இணைந்து கிளவுட் டெயில் என்னும் நிறுவனத்தை அமேசான் தொடங்கியது. தொடக்கத்தில் 51 சதவீதம் நாராயணமூர்த்தியின் கேட்டமரன் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கும், அமேசான் நிறுவனத்துக்கு 49 சதவித பங்குகளும் இருந்தன. சர்ச்சைகள் வெளியானதை அடுத்து இந்த நிறுவனத்தில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் 49 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக குறைக்கப்பட்டது.
எலெக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல பொருட்களை க்ளவுட்டெயில் விற்கிறது. பல பொருட்களை விற்பது மட்டுமல்லாமல் மற்ற விற்பனையாளர்களை விட அமேசான் தளத்தில் இந்த நிறுவனம் கூடுதல் சலுகையை பெறுகிறது எனும் குற்றச்சாட்டும் இருக்கிறது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இ-காமர்ஸ் துறைக்கு மேலும் சில விதிமுறைகளை அறிவித்தது. அதில் இ-காமர்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை நிறுவனத்தில் பங்குகள் இருக்ககூடாது. கூடுதல் தள்ளுபடி கொடுக்க கூடாது. புகார் தொடர்பான அதிகாரி ஒருவர் நியமனம் செய்யவேண்டும், அவர் இந்தியராக இருக்கவேண்டும் என பல உத்தரவுகளை மத்திய அரசு (நுகர்வோர் பாதுகாப்பு துறை) வெளியிட்டது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களை விசாரிக்க அழைத்திருக்கிறது. 2019-ம் ஆண்டு டெல்லி வியாபாரிகள் சங்கம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டி விதிமுறையை சரியாக பின்பற்றவில்லை. சிலருக்கு சாதகமாக நடந்துகொள்கிறது என புகார் அளித்தது.
இந்த புகார் மீது விசாரணை நடந்த சிசிஐ முடிவெடுத்தது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அமேசான் வழக்கு தொடுத்தது. ஆனால் ஜூன் 11-ம் தேதி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துவிட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வழக்கு தொடுத்தது. விதிமுறைகளை சரியாக பின்பற்றும் பட்சத்தில் வழக்கு விசாரணைக்கு ஏன் கவலைப்பட வேண்டும். வழக்கமான விசாரணைக்கு கூட எதற்கு பயம் என கண்டித்த நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஆகஸ்ட் 9-ம் தேதி உத்தரவிட்டது.
சிசிஐ கேள்விக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், நீங்களாகவே முன்வந்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் விசாரணை இல்லாத அளவுக்கு செயல்பாடு இருக்க வேண்டும் என்பதையே நீதிமன்றம் விரும்புகிறது என நீதிபதி ரமணா தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் அடுத்த ஆண்டு முதல் க்ளவுட்டெயில் (மே 19, 2022) செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. க்ளவுட் டெயில் போல Appario ரீடெய்ல் என்னும் நிறுவனத்திலும் அமேசான் முதலீடு செய்திருக்கிறது. பட்னி குழுமத்துடன் இணைந்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனமும் மறு சீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுநாள் வரை அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. விதிமுறைகளை இனியாவது உறுதி செய்ய வேண்டும்.