ஒரு யுனிகார்ன் நிறுவனத்தை எழுதி முடிக்கும் முன்பு மற்றொரு நிறுவனம் யுனிகார்ன் ( 100 கோடி டாலர் சந்தை மதிப்பு) பட்டியலில் இணைகிறது. தற்போதைய புது வரவு ஆக்கோ ஜெனரல் இன்ஷூரன்ஸ். (acko general insurance) நடப்பு 2021-ம் ஆண்டுல் 34 வது நிறுவனமாக ஆக்கோ இணைகிறது.


இந்தியாவில் காப்பீடு என்பது இன்னும் வளர்ந்துவரும் சந்தைதான். இந்த துறையில் அனுபவம் மிக்க வருண் துவா தொடங்கிய நிறுவனம் இது. டாடா ஏஐஜி மற்றும் பிராங்க்ளின் டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு சி.ஆர்.எம் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்தாலும் அதில் திருப்தி இல்லாமல் டெக்னாலஜி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனம் காப்பீடு நிறுவனங்களுக்கான செயலியை உருவாக்கி தரும் நிறுவனம். இதன் பிறகு கவர்பாக்ஸ் என்னும் இன்ஷூரன்ஸ் அக்ரிகேட்டர் நிறுவனத்தை தொடங்கினார்.


இந்த நிலையில் அடுத்த கட்டமாக பொதுகாப்பீட்டு நிறுவனத்தையே தொடங்கினார் துவா. 2016-ம் ஆண்டு இணை நிறுவனர் ருச்சி தீபக் உடன் இணைந்து இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு அக்டோபரில் காப்பீட்டுக்கான அனுமதி கிடைத்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுகாப்பீட்டு நிறுவனமாக செயல்பட தொடங்கியது. ஆட்டோமொபைல் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆகிய பிரிவுகளை தொடங்கியது. மொத்த விற்பனையில் ஆட்டோமொபைல் பாலிசிகள் அதிகம் விற்பனையாகின்றன. இதுதவிர ரைடர் இன்ஷூரன்ஸ், மொபைல் மற்றும் அப்ளிகேஷன் காப்பீடுகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.




வழக்கமான காப்பீட்டு நிறுவனங்கள் ஏஜெண்ட்  மூலமாகவே அதிக பாலிசிகள் விற்பனையாகும்.  ஏஜெண்ட்கள் மூலமாக விற்பனை நடைபெறுவதால் கமிஷனுக்காக பெரும் தொகை செலவு செய்யப்படும். அதனால் வாடிக்கையாளர் செலுத்தும் ப்ரீமியம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த நிறுவனம் டிஜிட்டல் மூலமாகவே விற்பனையை நடைபெறுகிறது. அதனால் ஒப்பீட்டளவில் பிரீமிய தொகை குறைவு.


நேரடியாக மட்டுமல்லாமல் இதர பார்ட்னர் நிறுவனங்கள் மூலமாகவும் காப்பீடுகளை விற்பனை செய்கிறது. அதனால் 2 ஆண்டுகளில் சுமார் 7 கோடிக்கும் மேலான பாலிசிகளை இந்த நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.


பில்லியன் டாலர்


இந்த நிறுவனத்தின் தொடக்கத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் நாராயண மூர்த்தி மற்றும் கிரிஸ் கோபால கிருஷ்ணன் ஆகியோர் முதலீடு செய்திருக்கிறார்கள். இதனை தொடரந்து அமேசான் நிறுவனமும் கணிசமான முதலீட்டை செய்திருக்கிறது. பின்னி பன்சால், ஜெனரல் அட்லாண்டிக், மல்டிபிளைஸ்  அசெட் மேனேஜ்மெண்ட், கனடா பென்ஷன் பண்ட், லைட் ஸ்பீட் குரோத் உள்ளிட்ட பல தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.




சில நாட்களுக்கு முன்பு 25 கோடி டாலர் அளவுக்கு  நிதி திரட்டியது. 1.1 டாலர் சந்தை மதிப்பில் இந்த நிதி திரட்டல் இருந்தது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரிவில் கவனம் செலுத்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் 80 சதவீதத்துக்கு மேல் இன்னும் ஹெல்த் இன்ஷுரன்ஸ் செய்யபடவில்லை. இந்த அனைத்து சந்தையும் ஒரே நிறுவனம் கைப்பற்ற முடியாது பல நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது என துவா தெரிவித்திருக்கிறார்.


அடுத்த பத்தாண்டுகளுக்கு வழக்கமான வினியோக முறையில் வளர்ச்சி இருக்காது. அமெரிக்காவில் டிஜிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் லெமனேட் (Lemonde) கடந்த ஆண்டு ஐபிஓவை வெளியிட்டது. 2020-ம் ஆண்டு சிறந்த ஐபிஓ இதுவாகும். அதுபோல மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியாவில் அடைய முடியும் என துவா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் 50 கோடி டாலராக இருந்த சந்தை மதிப்பு  தற்போது 100 கோடி டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது.


கவர் பாக்ஸ் என்பது அனைத்து காப்பீட்டு நிறுவனங்களை விற்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தை தொடங்கியவர், அடுத்த கட்டமாக பொதுகாப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி, மூன்று ஆண்டுகளுக்குள் யுனிகார்ன் நிறுவனமாக மாற்றி இருக்கிறார் துவா.