பழைய பேப்பர், பழைய இரும்பு, ஈயம், பித்தளை சாமான் ஏன் பழைய துணிமணிகள் கூட தெருவில் கூவிக் கொண்டு வந்து வாங்கிச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இங்கே ஒரு நிறுவனம் வீடு வீடாகச் சென்று பயன்படுத்திய பழைய எண்ணெய்யை காசு கொடுத்து பெற்றுச் செல்கிறது.


ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? யுரேனஸ் ஆயில் கார்ப்பரேஷன் என்று நிறுவனம் தான் இதனைச் செய்து வருகிறது. பொதுவாக பெரிய ஓட்டல்களில் பூரி, வடை என பொரித்த உணவுகளுக்காகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்யை சாலையோர வண்டிக் கடைக்காரர்கள் வாங்கிச் செல்வதுண்டு. அதை அவர்கள் மீண்டும் பயன்படுத்துவதால் உடல்நல உபாதைகள் ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனைத் தடுக்க அரசே பயோ டீஸல் தயாரிப்பு நிறுவனங்கள் இவ்வாறான பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை பெற்று பயோ டீஸல் தயாரித்துக் கொள்ள ஊக்குவித்தது.
அண்மையில் கூட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பயோ டீசல் தயாரிக்க வழங்கத் தொடங்கியது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.




இது போன்ற திட்டத்தைத் தான் சென்னையில் யுரேனஸ் ஆயில் கார்ப்பரேஷன் என்று நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் ஏ.ஷங்கர் அளித்த பேட்டி வருமாறு:


உலகளவில் இந்தியாவில் தான் சமையல் எண்ணெய் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதுவும் இந்தியாவில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு சராசரியாக 19 கிலோ எண்ணெய் உட்கொள்கிறார் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவே 12ல் இருந்து 13 கிலோ தான் ஆனால் இந்தியர்கள் 19 கிலோ பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சராசரியாக ஒரு நபர் 15 கிலோ பயன்படுத்துகிறார். அதனால் இங்கே எண்ணெய்க் கழிவுகளும் அதிகம். பொரித்த, வறுத்த எண்ணெய்யை சர்வசாதாரணமாக தரையில் கொட்டுவது, கிச்சன் சிங்கில் ஊற்றுவது போன்றவை நடைபெறுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்குக் கேடு உண்டாகிறது. இதைத் தவிர்க்கவே நாங்கள் இந்த எண்ணெய்யைப் பெற்று பயோ டீஸல் தயாரிப்பில் பயன்படுத்துகிறோம்.


சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரின் பல பகுதிகளிலும் எங்களின் பிரத்யேக வாகனத்தை அனுப்பி இந்த எண்ணெய்யைப் பெற்றுக் கொள்கிறோம். கிலோவுக்கு இத்தனை ரூபாய் என அங்கேயே மக்களிடம் கொடுத்து விடுகிறோம். மக்களுக்குப் பணமும் கிடைக்கிறது. பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் ஏற்படும் உடல் உபாதை பற்றியும் புரிகிறது. எங்களின் நிறுவனத்திற்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் உள்ளது. நாங்கள் இதை முறைப்படி பெற்று பயோ டீஸல் உற்பத்திக்கு அனுப்புகிறோம். RUCO ரீபர்போஸ் யூஸ்ட் குக்கிங் ஆயில் திட்டத்தை அரசு கொண்டு வந்து உணவகங்கள், அடுமனைகள் எப்படி பயன்படுத்திய எண்ணெய்யை அப்புறப்படுத்துவது என்ற வழிகாட்டுதலை வெளியிட்டது. அங்கீகரிக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் இந்த பயன்படுத்திய எண்ணெய்யை கொடுக்க வலியுறுத்தினர். அப்படித்தான் எங்களின் யுரேனஸ் நிறுவனம் இந்த எண்ணெய்யைப் பெற்று வருகிறது.


பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் குடல் சார்ந்த உடல் உபாதைகள் வரும் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதால் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.


நாங்கள் கழிவு எண்ணெய்யைப் பெற்று பல்வேறுகட்ட சுத்திகரிப்புக்கு உட்படுத்திதான் அதனை பயோ டீஸலாக மாற்றுகிறோம். பயோ டீஸல் நல்லதொரு மாற்று எரிசக்தி. அதனால் மக்கள் இந்த எரிசக்தி பயன்பாட்டுக்குத் திரும்பலாம்,


இவ்வாறு அவர் கூறினார்.