பயனாளர்கள் எண்ணிக்கை ஏறியிருந்தாலும் வருவாயில் சரிவை சந்தித்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருவாய் இழப்பு:
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் சமீப காலமாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய போதிலிருந்தே ஒரு நிலைத்தன்மையின்மை நிலவுகிறது. ஏற்கனவே அதன் வருவாய் 1.18 பில்லியன் டாலராக குறைந்த நிலையில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 270 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது.
மஸ்க்கால் சரியும் வருவாய்:
கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். ஆனால், அந்த முடிவை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கானது வரும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விவகாரங்கள் அதன் வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் மூலமாக கிடைத்துள்ள வருவாய் 2% மட்டுமே உயர்ந்து 1.08 பில்லியனை வருவாயாக ஈட்டியுள்ளது. இந்த வருவாய் 1.22 பில்லியனாக இருக்கும் என்று வால் ஸ்ட்ரீட் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த ஆஅண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் சப்ஸ்க்ரிப்ஸன்கள் எல்லாவற்றையும் சேர்த்து 1.18 பில்லியன் டாலர்கள் மட்டுமே ஈட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.19 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியிருந்தது ட்விட்டர் நிறுவனம். மொத்த வருவாய் இந்த காலாண்டில் 1.32 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்த நிலையில் சரிவை சந்தித்திருக்கிறது.
சமாதானம் பேசும் அதிகாரிகள்:
ட்விட்டர் நிறுவன விளம்பரப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விளம்பரதாரர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் தற்போது இறங்கியிருக்கின்றனர். எலான் மஸ்க்கிற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கின் போக்கு எப்படிச் சென்றாலும், எப்படி முடிவடைந்தாலும் அதன் வணிகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலையில் ட்விட்டரின் ஒரு பங்கின் விலை 38.90 டாலர்களாக இருக்கின்றது. இந்த சூழல் காரணமாக சுமார் 270 மில்லியன் டாலர்கள் வருவாயை இழந்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது ட்விட்டரின் ஒரு பங்கில் 35 செண்ட்களை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 65.6 மில்லியன் டாலர்களை லாபமாக ஈட்டியிருந்த நிலையில் இந்த ஆண்டு சரிவை சந்தித்திருக்கிறது.
பயனாளர்கள் உயர்ந்தாலும் வருவாய் சரிவு:
இந்த காலகட்டத்தில் ட்விட்டர் பயனாளர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 16% உயர்வை சந்தித்துள்ளது. தற்போதைய நிலையில் 237.8 மில்லியன் பயனாளர்கள் ட்விட்டரை ஆக்டிவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
எலான் மஸ்க் ட்விட்டரை தொடர்ந்து இகழ்ந்தது உள்ளிட்ட காரணங்களால் ட்விட்டரினுள் நிலைத்தன்மையின்மையை உருவாக்கியிருக்கிறது. இது ட்விட்டரின் வணிகம், பணியாளர்கள் மற்றும் பங்கின் விலை ஆகியவற்றை பாதித்துள்ளது என்று நீதிமன்றத்தில் வாதம் செய்ததையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.