நிறுவனங்களுக்கான வெரிஃபைட் கணக்குகளுக்கு வசூலிக்கப்பட உள்ள கட்டண விவரத்தை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால் பல ஊடக நிறுவனங்கள் பணம் செலுத்த முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


நிறுவனங்களுக்கான கட்டண விவரம்:


இதுதொடர்பாக டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குறிப்பிட்ட நிறுவனத்தின் டிவிட்டர் கணக்கை உறுதி செய்து தங்க நிற டிக் குறியீட்டை வழங்க மாதத்திற்கு அமெரிக்காவில் ஆயிரம் அமெரிக்க டாலர்களும், இந்தியாவில் 82 ஆயிரத்து 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். குறிப்பிட்ட நிறுவனங்களின் கூட்டு கணக்குகளை உறுதி செய்ய அமெரிக்காவில் மாதம் 50 டாலர்களும், இந்தியாவில் 4 ஆயிரத்து 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி நிறுவனங்கள் எதிர்ப்பு:


புதிய கட்டண முறையானது விளையாட்டு அணிகள், செய்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள்,பார்ச்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் என அனைத்திற்கும் அடங்கும். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த பல செய்தி நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி கணக்கை வெரிஃபைட் செய்வதை விரும்பவில்லை என கூறபடுகிறது. குறிப்பாக, நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் மற்றும் வாக்ஸ் மீடியா உட்பட பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி வெரிஃபைட் கணக்கை பெற முன்வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


மார்ச்-31 கடைசி நாள்:


 ஏற்கனவே ” தனிநபருக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளூ டிக் ஏப்ரல் 1ம் தேதி முதல் அகற்றப்படும். அந்த வெரிஃபைடு ப்ளூ டிக் குறியீடு தொடர்ந்து வேண்டுமானால் பயனாளர்கள் சந்தாதாரர்களாக மாற வேண்டும்” என ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியது. ப்ளூ டிக்கிற்கான சந்தா திட்டத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


கட்டண விவரம்:


பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 எனும் கட்டணத்தில் கிடைக்கிறது. இதேபோன்று, நிறுவனங்களுக்கான டிவிட்டர் கணக்குகளுக்கு தங்கச் சரிபார்ப்பு அடையாளத்தையும் சதுர அவதாரத்தையும், அரசு அமைப்புகளுக்கு கிரே குறியீடு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிறுவனங்களுக்கான கட்டண விவரத்தை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


காரணம் என்ன?


கடனில் மூழ்கியிருக்கும் ட்விட்டர் நிறுவனத்தை, அதன் வருவாயை அதிகரிப்பதன் மூலம் மீட்டெடுக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். ட்விட்டர், மெட்டா, ஆல்பாபெட் மற்றும் ஸ்னாப் போன்ற விளம்பரம் சார்ந்த இணைய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஆன்லைன் விளம்பர சந்தையில் ட்விட்டர் நிறுவனமும் தொடர்ந்து மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் வெரிஃபட் கணக்குகளுக்கு சந்தா என்பது விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு அதன் வருவாய் வழிகளை பல்வகைப்படுத்த நிறுவனத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.