தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70-வது ஆண்டு பவள விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆனந்த் மொரைஸ் தலைமை வகித்தார். செயலாளர் மோகன், துணைத் தலைவர் ஜெயந்த் தாமஸ், சகாயராஜ், செலஸ்டின் வில்லவராயர், விழாக் குழு ஆலோசகர்கள் ஜோ வில்லவராயர், வேல்சங்கர், எட்வின் சாமுவேல், ஒருங்கிணைப்பாளர் டேவிட்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக வஉசி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன், தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாற்ற வேண்டும் என்பது தான் அனைவரும் எண்ணமும். எங்களது அனைத்து திட்டங்களின் மைய புள்ளியும் சரக்குபெட்டக பரிமாற்று மையம் தான். நிச்சயமாக தூத்துக்குடி துறைமுகம் சரக்கு பெட்டக பரிமாற்று மையமாக மாறும்.
தற்போது உலகில் நிலவும் சூழ்நிலை, இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் நமது துறைமுகம் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஆகிய காரணங்களால் சரக்கு பெட்டகமாக இத்துறைமுகம் நிச்சயம் மாறும். இது தொடர்பாக துறைமுக ஆணைய கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம். எனவே நமது கனவு விரைவில் நிறைவேறும். இதன் ஒரு பகுதியாக துறைமுகத்தில் வெளித்துறைமுக விரிவாக்க பணிகள் ரூ.7000 கோடியில் நடைபெறவுள்ளது. இதில் புதிய கப்பல் தளங்கள் அமைத்தல், ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது.
துறைமுகம் இந்த ஆண்டு 11 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த ஆண்டு 40 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படும். ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும் என நம்புகிறோம். தூத்துக்குடி துறைமுக பகுதியில் ஹைட்ரஜன் உற்பத்தி மையம் அமைக்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். திரவ ஹைட்ரஜன், திரவ அமோனியா, பசுமை அமோனியா போன்றவை தயாரிக்கும் நிறுவனங்களை துறைமுக பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் ஹைட்ரஜன், திரவ அமோனியாவை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.மேலும், சூரிய மின்சக்தி நிலையம், காற்றாலை அமைக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது. துறைமுக பணிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மூலம் வஉசி துறைமுகம் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்றார்.
விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் பேசும்போது, தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் பல்வேறு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வசதிகளுடன் கூடிய பயணிகள் முனையம், விமான ஓடுதள விரிவாக்கம், இரவு நேர விமான சேவைக்கான பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. தற்போது தினமும் 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. புதிய விமான சேவைகளை தொடங்க விமான நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.
விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடையும் போது ஏர் இந்தியா போன்ற பெரிய விமானங்களை இயக்க முடியும். அதிக சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும். புதிய பயணிகள் முனையம் கட்டுமான பணிகள் முடிந்ததும், பழைய பயணிகள் முனையம் சரக்கு முனையமாக மாற்றப்படும். வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து விமான நிலையத்துக்கு தனி குடிநீர் திட்டம் ரூ.11 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இரவு நேர விமான சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த பணிகள் முடிவடைந்து விடும். அதுபோல வல்லநாடு மலையில் சிக்னல் டவர் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2 மாதங்களில் முடியும்.
இந்த பணிகள் முடியும் போது இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்றார்.விழாவில் கப்பல் முகவர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், துறைமுக, விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.