ஒவ்வொரு காலகட்டத்திலும் ரீடெய்ல் கடன் என்பது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இதன் வடிவம் மாறிக்கொண்டிருக்கிறதே தவிர ரீடெய்ல் கடன்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை தவணை முறை வாங்கினோம். தவணை முறையில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்றே சில நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. அதனை தொடர்ந்து தனிநபர் கடன்கள் வந்தன. கடந்த 10 ஆண்டுகளாக கிரெடிட் கார்டுகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது.


தற்போது இதன் மாறுபட்ட வடிவம்தான் `பை நவ் பே லேட்டர்’. தற்போது விழாக்காலம் நெருங்கி வருவதால் இந்த கடனை நிறுவனங்களும் வழங்குகின்றன, வாடிக்கையாளர்களுக்கும் தேவையானதாக இருக்கிறது.


கிட்டத்தட்ட இதனை கிரெடிட் கார்டு போல என்று சொல்லலாம். ஆனால் இந்தியாவில் சுமார் 6 கோடி கிரெடிட் கார்டுகள் மட்டுமே உள்ளன. 100 கோடி அளவுக்கு டெபிட் கார்டுகள் இருக்கின்றன. கார்டுகளை பொறுத்தவரையில் 6 சதவீதம் மட்டுமே விரிவடைந்திருக்கிறது. அதனால் இந்த வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால் இளைஞர்களுக்காக இதுபோன்ற புதிய திட்டத்தை பலரும் கொண்டுவந்திருக்கிறார்கள்.



கிரெடிட் கார்டு இல்லாதவர்கள், புதிதாக சம்பாதிக்க தொடங்கி இருப்பவர்கள், இளைஞர்கள் ஆகியோர்களுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த புராடக்ட். ஒரு பொருட்களை உடனடியாக வாங்கிக்கொள்ளலாம். ஆனால் வட்டியில்லாமல் சில தவணைகளுக்கு கடன் வழங்குவதை பை நவ் பே லேட்டர் என அழைக்கிறார்கள். எவ்வளவு காலத்துக்கு வட்டி இல்லை என்பதும், அதிக பட்சம் எவ்வளவு தொகை என்பது ஒவ்வொரு நிறுவனத்தை பொருத்தது. அதிகபட்சம் ஒரு லட்சம் வரை வாங்கிக்கொள்ள முடியும்.


குறைந்தபட்சம் 15 நாட்கள் வரை வட்டி கிடையாது. சில நிறுவனங்கள் மூன்று மாதம் வரை கூட வட்டியில்லாமல் வழங்குகிறார்கள்.


யார் வழங்குகிறார்கள்?


இ-காமர்ஸ் நிறுவனங்கள், புதிதாக தொடங்கப்பட்டுள்ள பின் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை இந்த புராடக்டை அறிமுகம் செய்துள்ளன.  பேடிஎம், போன்பே, லேசர்பே, மணிடேப், கேஷ் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.


வழக்கம்போல வழங்கப்பட்டுள்ள தவணை காலத்துக்குள் பணத்தை செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்த தவறினால் அதிக வட்டி இருக்கும். தவிர லேட் பேமெண்ட் சார்ஜ்-ம் விதிக்கப்படும். மேலும் சரியான காலத்தில் கடனை செலுத்தவில்லை என்றால் உங்களுடைய சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும்.



கிரெடிட் கார்டு vs  BNPL


கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்பொது கூட குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்கும் பொருட்களுக்கு இஎம்ஐக்கு மாற்றிகொள்ள முடியும். அதேபோல கிரெடிட் கார்டை அனைத்து இடங்களிலும் (பெட்ரோல், டீசல், இதர சேவைகளுக்கு) பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் BNPL எங்கு இருக்கிறதோ அங்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


ஆனால் கிரெடிட் கார்டை விட பெரும்பாலான BNPL திட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் வட்டி குறைவுதான். தவிர அனைவருக்கும் கிரெடிட் கார்டு கிடைக்காது. தவிர கிரெடிட் கார்டுகளுக்கு அப்ளை செய்தால் கூட சில வாரங்கள் ஆகும். ஆனால் இதுபோன்ற BNPL மூலம் கடன் எளிமையாக மற்றும் உடனடியாக கடனை வாங்கிக்கொள்ள முடியும்.


அதே சமயம் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது கேஷ் பேக் மற்றும் ரிவார்ட் புள்ளிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஒரு கிரெடிட் கார்டு இருந்தால்போது அனைத்து இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் BNPL திட்டங்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கு மாற வேண்டி இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஒரு BNPL திட்டத்துக்கு ஒரு BNPL நிறுவனம் இருக்கும். அமேசானில் வாங்க வேண்டி இருந்தால் வேறு நிறுவனம் மூலம் வாங்க வேண்டி இருக்கும்.



உங்களிடம் கிரெடிட் கார்ட் இருந்தால் பெரும்பாலான சமயங்களில் அதுவே சிறப்பான வழியாக இருக்கும். கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்கு BNPL நல்ல வழி. ஆனால் எவ்வளவு கடன் வாங்குகிறோம். எத்தனை நாட்களுக்கு வட்டி கிடையாது. எத்தனை தவணைகளில் செலுத்த வேண்டும் என்பதை உள்ளிட்டா  தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


கிரெடிட் கார்டோ, BNPL என எதுவாக இருந்தாலும் அது கடன் என்னும் பொறுப்பு இருக்க வேண்டும். இளைஞர்கள், புதிதாக சம்பாதிக்க தொடங்குபவர்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் வட்டியை விட எதிர்காலத்தில் வங்கி கடன்களையே பெற முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். 22 வயதில் 5,000 ரூபாயை திருப்பி செலுத்தி இருக்காவிட்டால் 35 வயதில் வீட்டுக்கடன் நிராகரிக்கப்பட கூடும்.