திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான தங்கும் விடுதி பழனி மலையடிவார பகுதியில் உள்ளது. இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட அறைகளும் உள்ளன. பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஆகியோர் இங்கு தங்கி செல்வது வழக்கம். இதற்கான பதிவு அலுவலகம், விடுதி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.




இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் தங்கும் விடுதிக்கு அரசு உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் ‘சைரன்' பொருத்திய கார் ஒன்று வந்தது. அந்த காரில், தமிழக அரசின் சின்னம் மற்றும் தேசியக்கொடி, மதுரை பதிவு எண் கொண்ட அந்த வாகனத்தின் எண், அரசு வாகனம் என்பதற்கு அடையாளமாக G என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு என்றும் எழுத்தில் வாகனத்தின் முன் பகுதியில் போர்டு வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் காரின் முகப்பு பகுதியிலும் தமிழ்நாடு அரசு என்று எழுதப்பட்டிருந்தது. அந்த காரில் 3 ஆண்கள், 3 பெண்கள், 4 குழந்தைகள் இருந்தனர். காரில் இருந்து டிப்-டாப் உடை அணிந்த 45 வயது ஆண் ஒருவர் மட்டும் கீழே இறங்கினார்.




பின்னர் அந்த நபர் விடுதி வரவேற்பு அறைக்கு சென்றார். அங்கிருந்த அலுவலரிடம் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், வி.ஐ.பி. சலுகையில் அறை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதற்கான அடையாள அட்டையையும் அவர் காண்பித்தார். வழக்கமாக ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் அதிகாரி யாரேனும் வந்தால், முன்கூட்டியே விடுதி நிர்வாகத்துக்கு உள்ளூர் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால், அவரது வருகை குறித்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் அந்த நபரின் பேச்சு, நடை, உடை பாவணைகளில் விடுதி அலுவலருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அந்த அலுவலர் நைசாக உயர் அதிகாரிகள் மற்றும் அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோவில் தங்கும் விடுதிக்கு போலீசார் விரைந்தனர். வி.ஐ.பி. சலுகையில் அறை கேட்ட நபரிடம் விசாரித்தனர்.




அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரையும் அவருடன் வந்தவர்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர், போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த அவரது பெயர் குமார் (47). பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். போலி அடையாள அட்டை மற்றும் அரசு சின்னத்துடன் கூடிய ‘சைரன்' பொருத்திய காரில், தமிழகம் முழுவதும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல வலம் வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அவருடன் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர், குமாருடன் பிளம்பர் வேலை செய்து வந்தவர். அவரிடம், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான வி.ஐ.பி. பாஸ் தன்னிடம் இருப்பதாகவும், காருக்கான டீசல் செலவு தொகை கொடுத்தால் அழைத்து செல்வதாகவும் குமார் கூறி இருக்கிறார். அதனை நம்பி, அந்த நபர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் காரில் குமாருடன் வந்துள்ளார்.





மேலும் அவர்களிடம் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று குமார் கூறவில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணைக்கு பிறகு அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதேநேரத்தில், போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்த குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வந்த கார் மற்றும் போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி இதுபோன்று வேறு ஏதேனும் முறைகேட்டில் குமார் ஈடுபட்டிருக்கிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பழனி முருகன் கோவிலை போல பிரசித்தி பெற்ற சில கோவில்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி சலுகை, சிறப்பு தரிசனத்தில் குமார் பங்கேற்று இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ‘சைரன்' பொருத்திய காரில் வலம் வந்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.