சமீப காலமாக, க்ரிப்டோ கரன்சி என்ற பெயர் பேசுபொருளாகி வருகிறது. இந்த டிஜிட்டல் சொத்துகளின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதோடு, உலகின் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்திருப்பதால் க்ரிப்டோ கரன்சி மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. உலகின் மிகப் பழையதும், பிரபலமானதுமான பிட்காயின் கடந்த ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. வெவ்வேறு விவாதங்களில் பிட்காயின் குறித்தும், வானளாவிய அளவில் உயர்ந்திருக்கும் அதன் மதிப்பு குறித்தும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 


ஆனால் இவை எங்கே தொடங்கின என்று உங்களுக்குத் தெரியுமா? க்ரிப்டோ கரன்சி குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், பிட்காயின் தோன்றிய கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும். 


பிட்காயின் தோன்றியது எப்படி?


பிட்காயினை உருவாக்கியவரை இதுவரை யாரும் கண்டதில்லை. கடந்த 2008ஆம் ஆண்டு, டிஜிட்டல் கரன்சி என்ற பெயரில் பிட்காயின் உருவாக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் திறந்தப் பயன்பாட்டு சாஃப்ட்வேராக மாறியது பிட்காயின். பிட்காயினை உருவாக்கியவர் தனிநபரா, குழுவா என்ற தகவல்கள் தெரிய வராத நிலையில், அவர்கள் சடோஷி நகமோடோ என்ற பெயரில் இதனை உருவாக்கியுள்ளது மட்டும் உலகத்திற்குத் தெரியும் தகவல். 



கடந்த 2008ஆம் ஆண்டு, `பிட்காயின்: நண்பர்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் பணப் பரிவர்த்தனை முறை’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்று பிட்காயின் தொடர்பாகப் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் எந்த அரசின் தலையீடும் இல்லாமல் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கரன்சியாக பிட்காயின் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த அரசும், தனியார் நிறுவனமும் பிட்காயினைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


2009ஆம் ஆண்டு, இந்த மென்பொருள் வெளியிடப்பட்டு, பிட்காயின் நெட்வொர்க் தொடங்கப்பட்டது. இன்றுவரை, இது அனைவரும் பயன்படுத்தும் திறந்தப் பயன்பாட்டு மென்பொருளாகவே இருக்கிறது. இதனை அனைவரும் பார்க்கவும், பங்களிக்கவும் முடியும். 


பிட்காயின்கள் மூன்று முக்கியமான அடிப்படைகளின் கீழ் பணியாற்றுகிறது. அவை தேவை மற்றும் வழங்கல், க்ரிப்டோகிராஃபி தொழில்நுட்பம், பரவலாக்கப்பட்ட நெட்வொர்க் ஆகியவை பிட்காயினின் அடிப்படை. கடந்த 2008ஆம் ஆண்டு, சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


பிட்காயின் எப்படி வேலை செய்கிறது?



உலகின் மிகப் பழமையான க்ரிப்டோ கரன்சி பிட்காயின். இந்த டிஜிட்டல் கரன்சியைப் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் மதிப்புக்கு ஈடாகப் பயன்படுத்தலாம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிட்காயின் செயல்படுகிறது. பெரிய கம்ப்யூட்டர் சிஸ்டம், சற்றே கடினமான தொழில்நுட்ப முறைகள், நல்ல இணைய வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பிட்காயினைத் தயாரிக்கலாம். மைனிங் என்ற மற்றொரு வழிமுறை மூலமாகவும் இதனை உற்பத்தி செய்யலாம். 


கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பிட்காயினை வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். சில நிறுவனங்கள் பிட்காயின் மூலமாகப் பரிவர்த்தனை மேற்கொள்வதை அங்கீகரிக்கின்றன. இவற்றின் விலை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போதைய, நவம்பர் 19 அன்றின்படி, இந்திய ரூபாய் மதிப்பில் பிட்காயின் 43.11 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


இந்தப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு முன், டிஜிட்டல் கரன்சி என்பது ஆபத்து கொண்டிருப்பது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.