ரெப்போ வட்டி உயர்வு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனக்கடனுக்கான வட்டி விகிதம் உயரும் எனத் தெரிகிறது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ''உக்ரைன் போரால் உலகளாவிய அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளோம். இந்திய பொருளாதாரம் நிலையாக இருக்கிறது. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்றார்
ரெப்போ ரேட்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் தான் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டிருப்பதால், ரிசர்வ் வங்கியிடம் நாட்டில் உள்ள வங்கிகள் அதிக விகிதத்தில் கடன் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இது கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ-களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இது புதியதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். அப்படியானால் இனி வரும் இஎம்ஐ தொகை அதிகரிக்கும்.
முன்னதாக, மே 4ம் தேதி ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டது. அதற்கும் முன்னதாக, 2020ம் ஆண்டு மே 22ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. கொரோனா காரணமாக சரிந்த பொருளாதாரத்தை சரி செய்யும் வகையில், பொருளாதாரத்தை அதிகரிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் 4 சதவீதமாக வைக்கப்பட்டிருந்தது. அது மே மாதம் 0.40% அதிகரித்ததன் மூலம் ரெப்போ ரேட் விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது 0.5% அதிகரிக்கப்பட்டு வட்டி விகிதம் 4.9%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.