ஆண்டுக்கு சுமார் ரூ.3.5 கோடி வருமானம் கிடைக்கும் வேலை சலிப்பை ஏற்படுத்துவதாக கூறி அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ராஜினாமா செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உலகில் பெரும்பாலான மக்களுக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என்பது இன்றளவும் கனவாகவே உள்ளது. பிடிக்காத வேலை, தேவைக்கு குறைவான ஊதியம் என கிடைத்த வேலையை குடும்ப சூழ்நிலை உட்பட பல காரணங்களால் நம்மில் பலரும் செய்து வருகிறோம். நல்ல ஊதியத்தில் கிடைத்த வேலையை நம்மை சுற்றியுள்ள யாராவது விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றால் நமக்கே சில சமயங்களில் கோபம் வரும். 


அப்படியான சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.3.5 கோடி வருமானம் கிடைக்கும் வேலை சலிப்பை ஏற்படுத்துவதாக கூறி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்நாட்டைச் சேர்ந்த மைக்கேல் லின் என்ற நபர் கடந்த 2017 ஆம் ஆண்டு மூத்த மென்பொருள் பொறியாளராக பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில் வேலைக்கு சேர்ந்தார். 


அதற்கு முன்பு அமேசானில் வேலை செய்து வந்த லின்னுக்கு நல்ல சம்பளம், இலவச உணவு, அதிக விடுமுறை போன்ற காரணங்களால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கினார். கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் அதிகளவில் வளர்ச்சி பெற தொடங்கின. இதனிடையே தினமும் தான் பார்த்து வந்த வேலை சலிப்பை ஏற்படுத்தியதால் தனக்கு வேறு பிரிவில் வேலை தருமாறு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் கேட்க நிர்வாகம் மறுத்து விட்டது. 


என்னதான் தான் அதிக சம்பளம் பெறும் வேலையை பார்த்தாலும் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை லின் உணர தொடங்கினார். இது அவரது பணியை பாதிக்க செயல்திறனை மேம்படுத்தக் கோரி நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகத்திடம் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எச்சரிக்கை கடிதம் வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன் லின் தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


லின் வேலையை விடுவதற்கு முதலில் அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த முடிவு தனது வாழ்க்கையை பாதிக்கும் என தயங்கிய அவர், பின் தைரியமாக ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். இப்போது எனக்கான வேலையை செய்ய நான் முடிவு செய்துள்ளேன். அதற்கான வருமானம் என்னிடம் இல்லை. ஆனால் நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். நல்லதே நடக்கும் என லின் உற்சாகமாக தெரிவித்துள்ளார். 


ஆனால் லின்னுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண