ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஏர் இந்தியாவிற்காக டாடா சான்ஸ் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலீட்டு முதலீடு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனங்களை அதன் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.  


1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. 






 


ஏர் இந்தியா விற்பனை: 









இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முன்வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.  இருந்தாலும், ஏர் இந்தியாவின் கணிசமான முதலாளி நிலை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு இந்திய தேசத்தைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  


கடந்த 2020ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல் முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் மத்திய அமைச்சரவை திருத்தம் செய்தது.