பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரக்குறிப்பு பகுதியில் காங்கிரஸை என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். இதனிடையே கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் நேற்று டெல்லி சென்றார்.
டெல்லியில் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர் சிங் நேற்று காலை சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அவர் பஞ்சாப் எல்லை பாதுகாப்பு குறித்து விவாதித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இதுபோன்ற பிரச்சனைகள் அங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அமரீந்தர் சிங் ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரல் ஆனது. ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள், மற்றும் பொது மக்கள் அதிகமாக அந்த பெயரை பயன்படுத்த தொடங்கினர்.
அமரீந்தர் சிங் என்கிற பெயரில் இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஒருவர் உள்ளார். இவரும் டுவிட்டரில் பிரபலமானவர். பெயர் ஒற்றுமை காரணமாக கோல்கீப்பர் அமரீந்தர் சிங்கை, கேப்டன் அமரீந்தர் சிங் தொடர்பான டுவீட்டுகளில் பலர் டேக் செய்துள்ளனர். இதனால் கடுப்பாகிப்போன இந்திய கால்பந்து அணி கோல் கீப்பர் அமரீந்தர் சிங் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தன்னை கேப்டன் என்று நினைத்துக்கொண்டு பலர் அவர் தொடர்பான டுவீட்டுகளில் டேக் செய்வதாக கூறிய அவர், தான் கால்பந்து வீரர் என்றும் தன்னை யாரும் இவ்வாறு டேக் செய்யவேண்டாம் என்றும் டுவிட் செய்துள்ளார். அவர் டீவீட்டில், "பத்திரிகையாளர்களே, நான் அம்ரீந்தர் சிங், இந்திய கால்பந்து அணி கோல்கீப்பர். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அல்ல ஹாக்கி வீரர்" என்று டீவீட்டியிருந்தார். அம்ரீந்தரின் டுவிட்டை ரீ டுவிட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங், நான் உங்களைப் புரிந்து கொள்கிறேன். நீங்கள் விளையாட்டில் முன்னேற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.