பிரபல  டாடா நிறுவனம், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல நிறுவனமான டாடா ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 83.67 சதவீத பங்குகள் டாடா நிறுவனத்திடம் உள்ள நிலையில், மீதமுள்ள பங்குகள் ஏர் ஏசியா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்திடம் உள்ளது. இது மலேசிய ஏர் ஏசியா குழுமத்தின் ஒரு பகுதி.


இந்த நிலையில் மீதமுள்ள பங்குகளுக்கான தொகையை செலுத்தி ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சிங்கப்பூர்  ஏர்லைன்ஸ் நிறுவனமான விஸ்தாரா நிறுவனத்துடன் இணைந்து  டாடா நிறுவனம் விமான சேவையை வழங்கி வரும் நிலையில், அனைத்து விமான சேவைகளை ஒருங்கிணைக்க இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



                                                           


இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்தில் (சிசிஐ) டாடா குழுமம் தாக்கல் செய்த மனுவில் ” டாடா குழுமத்தால் மறைமுகமாக நிர்வகிக்கப்படும் ஏர் ஏசியா தனியார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் வாங்கி, அதனை ஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க இருக்கிறோம்”எனத் தெரிவித்துள்ளது.


 




இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஏர் ஏசியா நிறுவனத்தின் 83  சதவீத பங்குகள் டாடா நிறுவனத்திடம் இருந்தாலும் அதை ஏர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்க சிசிஐ ஒப்புதல் அவசியமாகிறது. டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்ஃபிரஸ் ஆகிய நிறுவனங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.