பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தங்களிடம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை மேனஜர்களாக மாற்றும் விதத்தில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


ஆன்லைனில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமாக ஸ்விகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்விகி நிறுவனம் தங்களிடம் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றும் நபர்களை நிரந்தர சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகளை அடையும் மேனஜர்களாக மாற்றுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  “ஸ்டெப் ஹெட்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 



                                                             


இந்த மேனஜேர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பிட்ட ஊழியர்கள் அடங்கிய குழுவை நிர்வகிப்பார்கள். ஊழியர்களின் லாக் இன் ( உள் நுழையும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம்) தகவல்களை நிர்வகிப்பது, கேன்சல் செய்யப்பட்ட ஆர்டர்களை கவனித்தல், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் உள்ளிட்டவற்றை கண்காணித்துக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பொறுப்புக்கு தேர்வாக விரும்புகிறவர்கள் பட்டப்படிப்பு முடித்திருப்பதோடு, திறம்பட பரிமாறும் திறன் மற்றும் அடிப்படை கணினி சார்ந்த அறிவை பெற்றிருக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.


இந்த பொறுப்பு 2 வருடத்திற்கும் அதிகமாக நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நிறுவனம் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் ஜெய்மினி, ஸ்ரீஹர்ஷா மஜேட்டி மற்றும் நந்தன் ரெட்டி ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது  1,85,000 உணவகங்களுடனும் 500 கடைகளுடனும் இணைப்பு வைத்திருக்கிறது. இதுதவிர, 23 நகரங்களில் விரைவான மளிகை சேவையை கொடுக்க இன்ஸ்டாமார்க்கெட் சேவையையும் இயக்கி வருகிறது. 



                                                               


இதுகுறித்து ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெலிவரி ஊழியர்கள்தான் எங்கள் முதுகெலும்பு என்பதை ஸ்விகி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 2.7 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வருமானம் ஏற்படுத்தி தந்ததை எண்ணி பெருமையடைகிறோம். ஸ்விகி Step Ahead என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி புளூ காலர் வேலையை வொய்ட் காலராக மாற்றி நிர்வாக பொறுப்புகளுக்கு வர விரும்பும் ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.