புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் நான்சிபிரியா. இவரது செல்போன் எண்ணுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அனுப்பியது போல போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பி அவர் தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மொத்தம் ரூ.89 ஆயிரத்து 686-ஐ இழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான்சி பிரியா உடனடியாக சைபர் குற்றங்களுக்கான 1930 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர். அவரது வங்கி கணக்கில் இருந்து எந்த வங்கி கணக்கு எண்ணிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்து, அந்த பணம் மோசடி நபரால் பிறரது வங்கி கணக்கில் இருந்து மாற்றப்பட்டிருப்பதை தெரிவித்து அதனை பரிமாற்றம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர். இதில் ரூ.40 ஆயிரத்து ஒரு ரூபாய் மீட்கப்பட்டது. அந்த தொகை அவரது வங்கி கணக்கிற்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. இதனை பணத்தை இழந்தை நான்சிபிரியாவிடம் சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் காவல்துறையினர் வழங்கினர்.
தமிழ்கத்தில் ஆன்லைனில் பணம் மோசடி செய்யும் கும்பல் தங்களது கைவரிசையை தொடர்ந்து காட்டி வருகின்றனர். இதில் ஒரு சில வழக்குகளில் மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டையிலும் சைபர் கிரைம் காவல்துறையினர் 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த நிலையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு அவர்களுக்கு பணத்தை திரும்ப பெறுவது என்பது பெரும் கடினமாக இருந்து வருகிறது. ஆனால் வங்கி கணக்கில் இருந்து மர்மநபர்கள் பணம் எடுத்த உடனே சைபர் கிரைம் காவல்துறைக்கு 1930 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், http://cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம் எனவும், அப்படி தெரிவித்தால் இழந்த பணம் மீட்கப்படும் என சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் பணத்தை இழந்த பெண் உடனடியாக உதவி மைய தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்ததால் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இதனால் பாதிப்பணம் மீட்கப்பட்டது. இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர். ஆன்லைனில் பணம் மோசடி உள்பட சைபர் குற்றங்களுக்கு மேற்கண்ட தொலைபேசி எண் மற்றும் இணையதள முகவரியில் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும், காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அதுவரை காத்திருக்க வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.