உணவு விநியோக ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்விகி இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுமார் 400 ஊழியர்களை அதாவது பணியாளர்களில் சுமார் 7% பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்விகியின் இரண்டாவது பணிநீக்கங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் குழுக்களை பாதிக்கும் எனத் தெரிகிறது.  ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் ஸ்விகி நிறுவனம் 380 ஊழியர்களை விடுவித்தது குறிப்பிடத்தக்கது. 


தொழில்நுட்பத் துறையில் நீடித்த பின்னடைவால் செலவைக் குறைப்பதற்காக அணிகளை மறுசீரமைத்த பேடிஎம் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்றவற்றுடன் ஸ்விகி இணைகிறது. ஸ்விகி தனது ஐபிஓ செயல்முறைகளுக்காக கோடக் மஹிந்திரா கேபிடல், சிட்டி மற்றும் ஜேபி மோர்கன், போஃபா செக்யூரிட்டீஸ், ஜெஃப்ரிஸ் உள்ளிட்ட ஏழு முதலீட்டு வங்கிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


சொமாட்டோ மற்றும் ஸ்விகி ஆகியவை இந்திய உணவு விநியோக சந்தையில் முன்னணியில் உள்ளன. ஆனால் சமீபத்திய காலாண்டுகளில் சொமாட்டோ அதன் சந்தைப் பங்கை விரிவாக்கியுள்ளது என்று UBS மற்றும் AllianceBernstein தெரிவித்துள்ளது.


இந்திய உணவு விநியோக சந்தையில் 60% க்கும் அதிகமான பங்குகளை சொமாட்டோ கொண்டுள்ளது என்று அலையன்ஸ் பெர்ன்ஸ்டீன் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளது.