பணவீக்கம் சற்று தளர்ந்து வரும் நிலையில், பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது சற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து வெளிநாட்டு முதலீடுகள், இந்திய சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது. பல மாதங்களாக பங்குச் சந்தை சற்று சரிந்தே காணப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் தொடக்கத்தில், உலகளவில் பணவீக்கம் குறைய தொடங்கியதை அடுத்து முதலீடு சற்று அதிகரித்தது.
4 மாதங்களுக்கு பிறகு:
இந்நிலையில் காலை சந்தை தொடங்கியவுடன், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், 141. 62 புள்ளிகள் அதிகரித்து 59, 983.83 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 48.25 புள்ளிகள் அதிகரித்து 17,873.50 புள்ளிகளாக உள்ளது.
இந்நிலையில், தற்போது மேலும் அதிகரித்து, 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. இந்த உயர்வானது கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, மீண்டும் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது என்பது என குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் கடுமையான பணவீக்க கொள்கையால் பணவீக்கம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து டாலருக்கான தேவையும் அதிகரித்ததை தொடர்ந்து டாலர் மதிப்பும் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து, ஜூலை மாதத்திற்கு முன்பு வரை, முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து வெளியே வருவது தொடர் கதையாக இருந்தது.
பங்குகளில் முதலீடு அதிகரிப்பு
ஆனால் ஜூலை மாதம் தொடக்கத்தில் பணவீக்கம் சற்று குறைய ஆரம்பித்தது. அதை தொடர்ந்து முதலீட்டாளர்களும், மீண்டும் நிறுவனங்களில் முதலீடு செய்வது, சற்று அதிகரித்தது. கடந்த ஜூலை மாதத்தை பொறுத்தவரை 4,989 கோடி ரூபாய் மதிப்பிலான நிகர பங்குகள் வாங்கப்பட்டது. இந்த போக்கு மேலும் அதிகரித்து, இதுவரையிலான ஆகஸ்ட் மாதத்தில் 22, 452 கோடி மதிப்பிலான நிகர பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.
லாபமடைந்தவர்கள்:
சென்செக்ஸ் பங்குகள் உயர்வால், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவைகளின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
நிஃப்டி 50 பங்குகளில் 37 பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன, 12 பங்குகள் பின்னடைவை சந்தித்துள்ளன.
நஷ்டமடைந்தவர்கள்
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை பின்தங்கியுள்ளன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது, இது கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்