மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆறாவது பொருளாதார சென்சஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த தொழிலதிபர்களுள் 14 சதவிகிதம் பெண்கள் தொழிலதிபர்களாக இருக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. மாஸ்டர்கார்ட் பெண்கள் தொழிலதிபர்கள் அட்டவணை வெளியிட்டுள்ள அறிக்கையில், 57 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தொழில் துறையில் பெண்கள் பங்கேற்பில் இந்தியா 52வது இடத்தையும், உலக வங்கியின் 2018ஆம் ஆண்டு அறிக்கையில், 131 நாடுகளில் இந்தியா 120வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


ஆண் தொழிலதிபர்களோடு போட்டியிடும் போது, பெண்கள் தொழில்துறையில் முன்னேறுவதும், வெல்வதும் அவ்வளவு எளிய பணி அல்ல. எனவே, பெண்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான நிதி தொடங்கி சந்தையில் உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்வது வரை கடுமையான பணிகள் இருக்கின்றன. 


Streeபெண் தொழில் முனைவோருக்கு மட்டும் வழங்கப்படும் சில முக்கியமான அரசு உதவித் திட்டங்களை இதோ குறிப்பிட்டுள்ளோம்... 


1. பாரதிய மஹிளா வங்கி வணிகக் கடன் திட்டம்


பாரதிய மஹிளா வங்கி வணிகக் கடன் திட்டம் என்பது ரியல் எஸ்டேட், குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்பும் பெண்களுக்காக வழங்கப்படுகிறது. பெண் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக இதில் 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுவதோடு, இந்தக் கடன் விகிதம் சுமார் 10.15 சதவிகிதம் என்றோ, அதற்குச் சற்று அதிகமாகவோ வழங்கப்படுகிறது. 



சிறு மற்றும் உறு நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத நிதி அறக்கட்டளை (Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE)) என்பதும் அரசால் அறிவிக்கப்பட்டு, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு எந்த கொல்லேட்டரலும் இல்லாமல் 1 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 7 ஆண்டுகளுக்குள் கடன் தொகையைத் திரும்ப செலுத்த வேண்டிய இந்தத் திட்டத்தில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 


2. தேனா சக்தி திட்டம்


பெண் தொழில் முனைவோருக்கான நிதியுதவியாக வழங்கப்படும் தேனா சக்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை, சில்லறை வர்த்தகம், கல்வி, வீட்டுவசதி முதலான துறைகளின் கீழ் பணியாற்றும் பெண் தொழில் முனைவோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இதன் கீழ் சிறிய கடனாக 50 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். தொழில் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருக்கும் பெண் தொழிலதிபர்களுக்கு வட்டி விகிதம் 0.25 சதவிகிதமாகவும், கடன் திரும்பிச் செலுத்தும் காலம் 7 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


தேனா வங்கி அலுவலகத்தில் இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் தேவையான ஆவணங்களைச் சமர்பித்து கடனைப் பெறலாம். 


3. உத்யோகினி திட்டம்


`உத்யோகினி’ என்றால் பெண் தொழிலதிபர் என்று பொருள். பெண்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கான நிதியுதவியை மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் வழங்குகிறது. 18 முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு, தங்கள் குடும்பத்தின் மொத்த வருவாய், 45 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகை வழங்கப்படும். 


கர்நாடகா மாநிலப் பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தால் முதலில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் வெவ்வேறு பெயர்களில் பல்வேறு வங்கிகளில் இயங்கி வருகிறது. 



4. மஹிளா உதயம் நிதி திட்டம்


இந்திய சிறு தொழிலாளர் மேம்பாட்டு வங்கியின் மூலமாக மத்திய அரசு இந்தத் திட்டத்தைப் பெண் தொழில் முனைவோருக்காக உருவாக்கியள்ளதோடு, அவர்களின் வர்த்தகம் நிலையாக நடைபெற பணப் புழகத்தை உறுதி செய்ய அமல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையை சேவை, உற்பத்தி, தயாரிப்பு முதலான துறைகளில் பயன்படுத்தலாம். சிறிய தொழிலைத் தொடங்க பெண்களுக்கு இந்தத் திட்டத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்தக் கடன் தொகையை வர்த்தகத்தைப் பெருக்க விரும்புவோரும் பெறலாம். இந்தத் தொகையை 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டும். 


5. ஸ்த்ரீ சக்தி திட்டம்


பெண் தொழில் முனைவோருக்காக ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ள திட்டம் இது. இதில் சில்லறை வணிகம் மேற்கொள்ளும் பெண்கள், வர்த்தக நிறுவனங்கள் வைத்திருக்கும் பெண்கள், தானாகவே பணி தொடங்க விரும்பும் மருத்துவர்கள், அழகு நிலைய உரிமையாளர்கள் முதலான பெண்கள் முதலானோரை மேம்படுத்தும் விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களால் நடத்தப்படும் வர்த்தகத்தில் 50 சதவிகிதப் பங்குகள் பெண்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். 


இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகையைப் பெறலாம்.