உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், 7 கட்டங்களாக நடத்தப்படும் உத்திர பிரதேச மாநில தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.
2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நான்கு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் விலை மாற்றம் இல்லாமல் இருந்து வருவதால், தேர்தலுக்கு பின் விலை உயரும் என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில், “பெட்ரோல் டேங்கை நிறைப்பி கொள்ளுங்கள். மோடி அரசு அறிவித்த தேர்தல் தள்ளுபடி முடிவுக்கு வர இருக்கிறது” என ட்வீட் செய்திருக்கிறார். இந்நிலையில், இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனையாகிறது.
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 124-வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடுமையாக குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும் இந்தியாவில் நீண்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் மார்ச் 8ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு அடைய உள்ளன. ஆகவே அதன்பின்னர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய்:
டாலருக்கு நிகரான கச்சா எண்ணெய் விலை தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் அதிரடி விலை ஏற்றம் இந்தியாவிற்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்தியா தன்னுடைய 85 சதவிகித எண்ணெய் தேவையை இறக்குமதி செய்து கொள்கிறது. அதேபோல் 55 சதவிகித எரிவாயு தேவையையும் இறக்குமதி செய்து வருகிறது. ஆகவே இந்தியாவிற்கு இது பெரிய சிக்கலாக அமையும்.
பணவீக்கம் :
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அத்தியாவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்க கூடும். இது பொதுமக்களுக்கு பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே கடந்த வாரம் மத்திய அரசு ஏறி வரும் கச்சா எண்ணெயின் விலை தொடர்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்திருந்தது.
அத்துடன் தொடர்ந்து டாலருக்கு நிகரான கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் பெட்ரோலுக்கான கலால் வரியை குறை திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் ஏற்கெனவே இறக்குமதி செய்து எண்ணெய் கிணறுகளில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருக்கும் எண்ணெயை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்தியா-ஈரான் உடனான எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு உலை ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் எண்ணெய் விலை உயர்வு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று சில வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்