நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை ஆன லட்சக்கணக்கான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வங்கிகள் மூலமாகவே அவர்களுக்கான ஊதியத்தை வழங்கி வருகிறது. அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் வங்கிகளில் சம்பள கணக்குகள் மூலமாகவே வழங்கப்படுகிறது.


சேலரி அக்கவுண்ட் எனப்படும் இந்த சம்பள கணக்குகளில் இருப்புத் தொகை எதுவுமே இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படாது என்பதால், இந்த கணக்கை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன்படுத்தப்படும் சம்பள கணக்குகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.




அவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ. வங்கிகள் சம்பள கணக்கு ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை கீழே காணலாம். எஸ்.பி.ஐ. வங்கியில் சம்பள கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு 30 லட்சம் வரையில் விபத்து காப்பீடு திட்டத்தை பெற முடியும்.  சாலை விபத்துகளினால் சம்பள கணக்குகள் வைத்திருப்பவர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்கப்படும். மேலும், சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கடன் சலுகைகளையும் எஸ்.பி.ஐ. வங்கி அளிக்கிறது. இதன்படி, தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன் என எந்த வகை கடனை பெற விண்ணப்பித்தாலும், அவர்களுக்கு 30 சதவீதம் வரை செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படும்.




எஸ்.பி.ஐ. வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓவர் டிராப்ட் வசதியும் பெற முடியும். இதுமட்டுமின்றி, அவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அவர்கள் இணையதளம் மூலம் செய்யும் எந்தவொரு பணப்பரிவர்த்தனைக்கும் அவர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ். நெப்ட் கட்டணங்களும் கிடையாது.


இதுபோன்று பல்வேறு வங்கிகளும் சம்பள கணக்குதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. நீங்கள் சம்பள கணக்குதாரர்களாக இருந்தால் நீங்களும் மேற்கண்ட சலுகைகளுக்கு முறையாக விண்ணப்பித்து அதன் பலனை அடையவும்.