எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி டெபிட் கார்டே இல்லாமல், ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி:
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எனும் பெருமையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெற்றுள்ளது. 5.11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாகவும் உள்ளது. கடந்த 1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியில், கடந்த 2017ம் ஆண்டு YONO எனப்படும் டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, 6 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களுடன் நாட்டின் மிகவும் நம்பகமான மொபைல் பேங்கிங் செயலியாக உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் YONO மூலம் 64% அல்லது 78.60 லட்சம் சேமிப்புக் கணக்குகள் டிஜிட்டல் முறையில் எஸ்பிஐ வங்கியில் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் சேவை:
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி உருவாக்கப்பட்ட 68வது ஆண்டையோட்டி, அதன் டிஜிட்டல் சேவை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி “எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி மற்ற வங்கி ஏடிஎம்களிலும், டெபிட் கார்ட் இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு UPI QR CASH வசதியை பயன்படுத்த வேண்டும். ஏடிஎம் மையங்களில் ஒரு க்யூஆர் கோடு உருவாக்கப்படும், அதை தங்களது மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணத்தை எடுத்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு எஸ்பிஐ வங்கியின் YONO செயலியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செயல்முறையை எப்படி பயன்படுத்துவது?
Interoperable Cardless Cash Withdrawal எனப்படும் ICCW எனும் புதிய அம்சத்தை கொண்டு தான், டெபிட் கார்டே இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி அமல்படுத்தப்பட்டு உள்ளது. எஸ்பிஐ மட்டுமின்றி பிற வங்கி வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள UPI QR Cash எனும் அம்சத்த அணுகினால், அந்த திரையில் single-use dynamic க்யூஆர் கோட் தோன்றும். அதனை யுபிஐ செயலியில் உள்ள ஸ்கேன் ஆப்ஷன் மூலம் ஸ்கேன் செய்த பிறகு, பயனாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
புதிய அம்சத்தின் பயன் என்ன?
புதிய அம்சத்தால் பயனாளர்கள் டெபிட் கார்டை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, கார்டை இயந்திரத்தின் உள்ளே சொருகி ரகசியமாக கடவுச்சொல்லை பதிவிட வேண்டியதில்லை, டெபிட் கார்ட் க்ளோனிங் செய்யப்படும் அபாயம் தவிர்க்கப்படும் என எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பயனாளர்கள் முழுமையாக டிஜிட்டல் சேவைக்கு மாறலாம் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
YONO செயலி மேம்பாடு:
எஸ்பிஐ வங்கியின் YONO செயலி YONO ஃபார் எவிரி இந்தியன் என மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்கேன் அண்ட் பே, பே பை காண்டேக்ட்ஸ், மற்றவர்களிடமிருந்து பணத்தை கோரி பெறுவது போன்ற மற்ற யுபிஐ செயலியில் உள்ள அம்சங்களையும் இனி YONO செயலியில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி நம்பிக்கை:
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காரா ஒரு அறிக்கையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் நிதி சுதந்திரம் மற்றும் வசதியுடன் அதிகாரம் அளிக்கும் அதிநவீன டிஜிட்டல் வங்கி தீர்வுகளை வழங்குவதற்கு எஸ்பிஐ அர்ப்பணிப்புடன் உள்ளது. தடையற்ற மற்றும் இனிமையான டிஜிட்டல் அனுபவத்திற்கான எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து, YONO செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.