ரஷ்யா - உக்ரைன் போரால் தங்கம் விலை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் வரை உயரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
நேற்றைய தாக்குதலை தொடர்ந்து இன்று ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலைத் தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில் நேற்று (பிப்.24) போர் தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. கொரோனா முதல் ஊடரங்குக்குப் பிறகு (மே 2020) சென்செக்ஸ், நிஃப்ட் ஆகியவை கடுமையான சரிவைக் கண்டன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ரஷ்யா - உக்ரைன் போரால் உலகப் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்படும் என்று தொழில்துறை நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் பணவீக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதலீட்டாளர்கள் தங்கத்தின்மீது தங்களின் கவனத்தைக் குவித்தனர். இதனால் நேற்று தங்கத்தின் விலை ரூ.1250 வரை ஏற்றம் கண்டது. இன்று மீண்டும் விலை குறைந்துள்ள நிலையில், விலை ஒரே நிலையில் இருக்காது என்றும் அதில் ஏற்றம் இருக்கும் எனவும் கருத்து நிலவுகிறது.
இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த எச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் தபான் பட்டேல், ’’போர் காரணமாகத் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 2.25 சதவீதம் அதிகரித்து, ரூ.51,500 ஆக உயர்ந்தது.
இந்த விலை உயர்வு, 2022ஆம் ஆண்டில் ரூ.55 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும். அடுத்த ஆண்டு ரூ.62 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும்’’ என்று தெரிவித்தார்.
நிர்ம பங்கின் பொருட்கள் ஆய்வுத் தலைவர் குனல் ஷா கூறும்போது, ’’இந்த ஆண்டில் ரூ.54 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயிரம் வரை தங்கத்தின் விலை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.62 ஆயிரம் வரை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சராசரியாக 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ரூ.10 ஆயிரம் வரை அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.