சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 2 திரைப்படங்களைக் கொடுத்த பிறகு, அமேசான் ப்ரைம் தளத்தில் `சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் மூலமாக பெரும் வெற்றியைக் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார்.


ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஈரானியத் திரைப்பட இயக்குநர் மஜீத் மஜிதி, தேசிய விருதுகள் பெற்ற சமீர் சஞ்சய் வித்வான்ஸ் ஆகியோருடன் பணியாற்றிய ஷரீன் மந்திரி, கிஷோர் அரோரா ஆகியோரின் நமா பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதல் பாலிவுட் திரைப்படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. 


`பிர்சா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் பா.ரஞ்சித் பாலிவுட்டில் அறிமுகமாகும் திரைப்படமாக இருக்கவுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பு இந்தப் படத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட தயாராகி வருகிறது. மேலும், பழங்குடிகளின் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை முழுமையாக பதிவு செய்யும் முயற்சியாக படத்தின் இயக்குநர் குழு ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் முதலான மாநிலங்கள் முழுவதும் பயணம் மேற்கொண்டு, கதையின் இறுதி கட்டத்தை எட்டி வருகின்றனர். 



தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித், `எனது முதல் இந்தி திரைப்படத்திற்காக இதனை விட சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்க முடியாது. இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியும், ஆராய்ச்சியும் மிகவும் நேசிக்கத்தக்க பணியாக அமைந்தது. இதன்மூலம் பிர்சாவின் வாழ்க்கையில் இருந்து ஊக்கத்தையும், சுதந்திரம், சுயாட்சி முதலானவற்றிற்காக அவருடைய தீர்க்கமான பார்வையையும் கற்றுக் கொண்டுள்ளேன். இந்த ஆராய்ச்சியின் போதும், திரைக்கதை எழுதும் போதும் பொறுமையுடன் காத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 


இந்தத் திரைப்படம் குறித்து பேசியுள்ள அதன் தயாரிப்பாளர் ஷரீன் மந்திரி, `எங்கள் நமா பிக்சர்ஸ் நிறுவனத்தின் மக்களுடன் கலந்துரையாடும், கொண்டாட வைக்கும், ஊக்கமூட்டும் கதைகளையே சொல்ல விரும்புகிறோம். படக்குழுவினர் தீவிர ஆராய்ச்சிகளைச் செய்துள்ளதால், மிக பிரம்மாண்டமாக பிர்சாவின் கதையை உங்கள் கண் முன் கொண்டுவர முயன்று வருகிறோம்’ எனக் கூறியுள்ளார்.  



மற்றொரு தயாரிப்பாளரான கிஷோர் அரோரா, `பிர்சா முண்டாவின் புரட்சிகர கதை வீரத்தை எல்லா வகைகளிலும் வெளிப்படுத்துகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைவதிலும், அவரது முதல் பாலிவுட் திரைப்படத்தைத் தயாரிப்பதிலும் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த ஆண்டில் நிச்சயம் படம் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார். 


நாடு முழுவதும் ரசிகர்களால் பாராட்டப்பட்ட பாக்சிங் அரசியல் திரைப்படமான `சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது `பிர்சா’ படத்தின் மூலமாக பாலிவுட்டில் நுழைகிறார். 19ஆம் நூற்றாண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிய பழங்குடி மக்கள் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையைத் தழுவிய திரைப்படமாக இது இருக்கும்.