டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.


வரலாறு காணாத வீழ்ச்சி:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்றையதினம் ரூபாயின் மதிப்பு 79.03 டாலராக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், இன்று மேலும் வீழ்ச்சியடைந்து வரலாற்றில் இல்லாத அளவிற்கு 79.11 ரூபாய் என்ற அளவிற்கு வந்துள்ளது. அந்நிய டாலர் முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வது போன்றவற்றின் காரணமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதலே சுமார் 6% சதவீதம் அளவிற்கு இதன் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது.


இந்த ஆண்டின் தொடக்கம் முதலே சரிவை சந்தித்துவந்த இந்திய ரூபாயின் மதிப்பு, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக வேகமெடுத்துள்ளது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம், பணவீக்கம் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவையே முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்தியாவானது ஏற்றுமதி செய்வதை விட அதிகம் இறக்குமதியே செய்கிறது. இதனால், ஏற்றுமதியை விட டாலருக்கான தேவை இறக்குமதிக்கே அதிகம் தேவைப்படுகிறது.




வெளியேறும் அந்நிய முதலீடு:


அதே நேரம் இந்த ஆண்டு தொடக்கம் முதலே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி வருவதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 28.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை இந்த ஆண்டு மட்டும் விற்றுள்ளனர். இது கடந்த 2008ம் ஆண்டு நடந்த பொருளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். அந்த ஆண்டில் 11.8 பில்லியன் டாலர்கள் வெளியேறியிருந்த நிலையில் இந்த முறை அதிகம் வெளியேறியுள்ளது.


உயரும் கச்சா எண்ணெய் விலை:


கச்சா எண்ணெயின் விலையும் இன்று 109.86 டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இந்த ரூபாய் வீழ்ச்சியானது பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக மாறக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியா இறக்குமதியையே சார்ந்திருப்பதால் கச்சா எண்ணெய், எரிவாயு, உலோகம் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய கூடுதலாக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படும். இதனால், இவை சம்பந்தமான பொருள்களின் விலை கடுமையாக உயரக்கூடும்.




பணவீக்கம் அதிகரிக்கும்:


இந்த அளவிற்கு ரூபாய் வீழ்ச்சியடைவது நாட்டின் பணவீக்கத்தையும் அதிகப்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவின் எரிபொருள் தேவை அதிகம் என்ற நிலையில் கச்சா எண்ணையை 80% மேல் இறக்குமதி தான் செய்கின்றது. கடந்த மே மாதம் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 110 டாலர்களாக இருந்த நிலையில் அது தற்போது 122 டாலர்களாக அதிகரித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் ரஷ்யா போரின் போது 100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய்விலை இன்னும் குறையாமல் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அதனால், கச்சா எண்ணெய்க்கே அதிக டாலர்களை இந்தியா செலவிடும் நிலையில் பொருள்களின் விலையும் உயரும் அதனால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.