Make Adultery Crime Again: திருமண பந்தத்தை பாதுகாக்க திருமணத்தை மீறிய உறவை குற்றமாக்கவேண்டும் என, மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எம்.பிக்க குழு பரிந்துரைத்துள்ளது.


எம்.பிக்கள் குழு பரிந்துரை:


கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், பாரதிய நியாய சன்ஹிதா எனும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதுதொடர்பான தங்களது அறிக்கையில்,  ”திருமணத்தை மீறிய உறவை குற்றமாக்கவேண்டும். ஏனெனில் திருமண உறவு புனிதமானது மற்றும் அது பாதுகாக்கப்பட வேண்டியது. அதோடு, திருமணத்தை மீறிய உறவு குற்றமாக்கப்படும்போது, ஆண் மற்றும் பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் அந்த சட்டம் நடுநிலையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும், தவறு இழைத்தவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்” என எம்.பிக்கள் குழு பரிந்துரைத்துள்ளது.


ப. சிதம்பரம் சொல்வது என்ன?


பாரதிய நியாய சன்ஹிதா என்பது இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மாற்றியமைக்கப்படும் மூன்று தொகுப்பின் ஒரு பகுதியாகும். பாஜக எம்பி பிரிஜ் லால் தலைமையிலான உள்துறைக்கான நிலைக்குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இது அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதாவில் மாற்று கருத்தை சமர்ப்பித்தவர்களில் காங்கிரஸ் எம்.பி ப. சிதம்பரமும் ஒருவர் ஆவார். அதன்படி,  தம்பதியினரின் வாழ்க்கையில் நுழைவதற்கு எந்த அரசுக்கும் உரிமை இல்லை. மூன்று மசோதாக்களும் பெரும்பாலும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களின் காபி &  பேஸ்ட் ஆக தான் உள்ளது” என கூறியுள்ளார்.


உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முரணான பரிந்துரை:


நடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஒருவேளை ஏற்றுக்கொண்டால், அது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாக அமையும். காரணம், கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, திருமணத்தை மீறிய உறவு குற்றம் கிடையாது, குற்றமாக இருக்கவும் கூடாது என தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் இடம்பெற்று இருந்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ”திருமணத்தை மீறிய உறவு சிவில் குற்றமாக இருக்கலாம். விவாகரத்துக்காக இருக்கலாம். ஆனால் கிரிமினல் குற்றமாக இருக்க முடியாது” என்று கூறினார். இதன் மூலம் 163 ஆண்டுகள் பழமையான, காலனித்துவ காலச் சட்டம் "கணவன் மனைவிக்கு எஜமானன்" என்ற செல்லாத கருத்தைப் பின்பற்றுவதாக நீதிமன்றம் நியாயப்படுத்தியது.  இது ஒரு பெண்ணின் சுயாட்சி மற்றும் கண்ணியத்தை மீறுவதாகக் கூறியது. அதற்கு நேர் எதிராக தான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது.


தீர்ப்புக்கு முன்னதாக..!


இந்த தீர்ப்புக்கு முன்னதாக திருமணத்தை மீறிய உறவானது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. கணவனின் அனுமதி அல்லது சம்மதமின்றி அவரது மனைவியுடன் வேறொரு நபர் உடலுறவு கொண்டால், அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்று சட்டம் கூறியது.