முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 


அதன்படி வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இனி இணைந்து செயல்படும். இந்த கூட்டணி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.11,500 கோடியை முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் தனிப்பட்ட பங்குகளை பெற்றுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இணைவால் இந்த கூட்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.70,352 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


அதேசமயம் இந்த கூட்டணி நிறுவனத்தில் ரிலையன்ஸ்தான் ஆதிக்கம் செலுத்தும். மொத்த பங்குகளில் ரிலையன்ஸ் 16.34% பங்குகளையும், வயாகாம்18 46.82% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளை வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி வந்த நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது தொழில்துறையில் பேசுபொருளாகியுள்ளது. 


இதற்கிடையில் முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி ரிலையன்ஸ் - டிஸ்னி நிறுவனத்தில் தலைவராக பதவி வகிப்பார். மேலும் உதய் ஷங்கர் துணைத் தலைவராகவும் இருப்பார் என இதுதொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதா அம்பானி சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாரியத்தில் இருந்து விலகி அறக்கட்டளை விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். 






மேலும் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி, இந்த கூட்டணி நிறுவனத்துக்கு இந்தியாவில் டிஸ்னியின் திரைப்படங்களின் தயாரிப்பு உரிமை மற்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிஸ்னியின் கருக்களை பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் ஒரு ஸ்ட்ரீமிங் சேவையையும், 120 சேனல்களையும் கொண்டிருக்கும். ரிலையன்ஸ் - டிஸ்னி ஒப்பந்தப்படி, ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ரிலையன்ஸ் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய ஊடக ராம்ராஜ்ஜியம் உருவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: Bank Holidays March 2024: வங்கிக்கு போறீங்களா? மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் லீவு - நோட் பண்ணிக்கோங்க!