'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் ஆண்டு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி என்ன பேச போகிறார் என்பது குறித்து, முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த உரை
ஒவ்வொரு ஆண்டும், நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில், பங்குதாரர்களிடையே முகேஷ் அம்பானி உரையாற்றுவது வழக்கமாக மாறி உள்ளது. உரையில், கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் என பலவிஷயங்கள் குறித்து அவர் அறிவிப்பார். 222 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்துள்ள அம்பானி வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே தனது முதலீட்டாளர்களிடம் பேசுவதால் இந்த உரை நாளடைவில் முக்கியம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இவரது இந்த ஸ்பீச் பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு வாரன் பஃபெட்டின் வருடாந்திர கடிதங்கள் போன்று பிரபலமடைய தொடங்கி எதிர்பார்ப்புகளை குவித்துள்ளது.
என்னென்ன எதிர்பார்க்கலாம்?
அந்த வகையில், நாளை நடைபெறும் கூட்டத்தில் 5ஜி சேவை எவ்வாறு செயல்படுத்தப் பட உள்ளது, அவரது இடத்துக்கு அடுத்ததாக வரப்போகும் வாரிசு யார், அதானியுடனான போட்டி ஆகிய விஷயங்கள் குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்து உள்ளது. மேலும், கட்டணம், வருமானத்துக்கான வாய்ப்புகள், புதிய தொலைதொடர்பு சாதன அறிமுகங்கள் ஆகியவையும் எதிர்பார்க்கப் படுகின்றன.
வாரிசுகளுக்கு பொறுப்புகள்
வாரிசு விஷயத்தை பொறுத்தவரை, ஏற்கனவே பல்வேறு பதவிகளில் தன்னுடைய மகள் இஷா மற்றும் மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோரை அமர வைத்துள்ளார். அவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படக்கூடும் என பலர் கருதுகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜூன் மாதம் அம்பானி விலகினார், இந்தியாவின் மிகப்பெரிய வயர்லெஸ் ஆபரேட்டராக இருக்கும் தனது மூத்த மகன் ஆகாஷ் தலைமை ஏற்றார்.
பங்கு வெளியீடுகள்
அம்பானியின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதால், முதலீட்டாளர்கள் தலைமை மாற்றத்தில் இன்னும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், இஷா, அனந்த் மற்றும் அம்பானியின் மனைவி நிதா ஆகியோர் அதிக பொறுப்பை ஏற்பார்கள் என்று தெரிகிறது. இது தவிர்த்து மேலும் மிகவும் அவசியமாக பார்க்கப்படுவது 'ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீட்டெய்ல்' ஆகிய நிறுவனங்களின், புதிய பங்கு வெளியீட்டு குறித்ததுதான். அடுத்ததாக, 5ஜி அறிமுகம் குறித்தும், இந்த சேவையை அறிமுகம் செய்யும் நாள் குறித்தும் அறிவிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்