வணிக வங்கிகளுக்கான ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாமல் நான்கு சதவீதமாகவே நீடிக்கிறது என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். மேலும், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்திலும் (3.35) மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தார்.
நாணயக் கொள்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. கோவிட்-19 நோய் தொற்றல் எற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை மட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தேவைப்படுவதாக கூறிய அவர், இந்த நிதியாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரெப்போ/ ரிவர்ஸ் ரெப்போ என்றால் என்ன?
வணிக வங்கிகளுக்குரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடனைப் பெறும். அந்நிலையில், விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படும்.
பணவீக்கத்தைக் (கட்டுப்படுத்த/ அதிகரிக்க) ரெப்போ விகிதத்தை (அதிகரிப்பதன்/குறைப்பதன்) மூலம் கடன் வாங்குவதற்கான செலவை (அதிகப்படுத்தி/ குறையப்படுத்தி), கடன் வாங்குவதைக் (குறைக்கிறது/அதிகரிக்கிறது.)
பணவாட்ட (Deflation) சூழ்நிலையில் வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே ரிவர்ஸ் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போவை உயர்த்தினால், அது வணிக வங்கிகளுக்கு இலாபகரமான வட்டி விகிதமாகி, அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதனால் அந்த பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது. இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பது குறைகிறது. இது இயற்கையாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.