வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 


நாணயக் கொள்கை கூட்டம்:


இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் இன்று (08.06.2023)  நடைபெற்றது. ரெப்போ வட்டி விகிதம், இம்முறை மாற்றமின்றி தொடர்வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ( Shaktikanta Das) அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தும். ரிசர்வ் வங்கி ஒரு வருடத்தில் ஆறு இருமாத கொள்கை கூட்டம் நடத்துவது வழக்கம். இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய விசயங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.


கொரோனா காலத்தில் சரிந்த பொருளாதாரத்தை சரி செய்வதறகாக இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த வட்டி விகிதம், கடந்த 2022 மே மாதம் முதல் ஆறு முறை உயர்த்தப்ப்பட்டது. கடந்த 2020 -ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் புதிய கொள்கையின் படி, 6.25 சதவீதமாக உயர்த்தியது. அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் 6.5 சதவீதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2022 ஆண்டில் மே மாதம் 40 பேசிக் பாயிண்ட் மற்றும் ஜூன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் 50 பேசிக் பாயிண்ட்கள் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.  கடந்த பிப்ரவரி மாதமும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவித்திருந்தது. 


தொடர்ந்து நாட்டில் பணவீக்கம் குறைந்து வருவதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் 2023-24 -ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தெரிவித்த ஆளுநர், ஜி.டி.பி.வளர்ச்சி 6.5% -ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல் காலாண்டில் 8.0%, இரண்டாம் காலாண்டில் 6.5% மூன்றாம் காலாண்டில் 6.0%, நான்காம் காலாண்டில் 5.7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 


மேலும், பணவீக்கம் குறித்து தெரிவிக்கையில், “ பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. ரிசர்வ் வங்கி அதை தொடர்ந்து கவனித்து வருகிறது. நிதியாண்டில் பணவீக்கம் 4%-க்கு மேலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை விட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.”  என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.


ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன, ஏன் உயர்த்தப்படுகிறது?


 ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதம் என்றும், வங்கிகள், ரிசர்வ் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதம், ரிவர்ஸ் வட்டி விகிதம் உள்ளிட்டவை முதன்மையான கருவிகளாக பயன்படுகிறது.


பணவீக்கம்:


வங்கிகளில், அதிக பணம் இருந்தால், மக்களுக்கு அதிக கடன்களை வங்கிகள் வழங்கும். அதனால் மக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனால், மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரிக்கும். மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை ஏற்படும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதுவே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.


எனவே பணவீக்கத்தை குறைக்க வேண்டுமானால் ( அதாவது பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ), மக்களிடம் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டும்.


ஆகையால், வங்கிகளில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் குறைய தொடங்குவார்கள். கடன் வாங்குவது குறையும் போது, மக்களிடம் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை மக்கள் வாங்குவது குறையும். பொருட்களை வாங்காத போது, அதன் விலை குறைய தொடங்கும். பணவீக்கமும் குறையும்.


எனவே ரிசர்வ் வங்கி, இதர வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என அறிந்து கொண்டோம்.