Price Hike: தமிழ்நாட்டில் விற்கப்படும் பால் மற்றும் தயிர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு விற்பனை செய்யும் ஆவின் பால் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் மற்றும் பால் பொருட்களை மக்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். 


இதில் அரசு விற்பனை செய்யும் ஆவின் பாலுக்கும், தனியார்  நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலுக்கும் லிட்டருக்கு ரூபாய் 20 வரை வித்தியாசம் இருப்பதால், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனை மையங்களில் விரைவில் விற்பனையாகி விடுகிறது. கடந்த ஆண்டு மட்டும் அதாவது 2022-இல் மட்டும் 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 2 வரை உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 


பால் விலை உயர்வினால், பாலின் உபபொருட்களான தயிர், நெய், பன்னீர் ஆகியவையின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விற்பனைக்கு இருக்கும் பொருட்கள் பழைய விலையிலும், இன்றைய தேதியில்  அச்சிடப்பட்டு வரும் பொருட்கள் புதிய மாற்றப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.