ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது சரஸ்வதி நகர் கிராமம். இங்கே சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் வசித்து வருபவர்கள் தான் கமலி ஸ்ரீ மற்றும் சுந்தரபாண்டியன். சுந்தரபாண்டியன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறுவயதில் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது கீழே கிடந்த கம்பியை எடுத்து மேலே தூக்கி விளையாடும்போது ஊரின் நடுவே தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த சுந்தரபாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது இரண்டு கைகளையும் காப்பாற்ற முடியாமல் போனது அன்றிலிருந்து இரண்டு கைகளும் இல்லாமல் பள்ளிக்கு சென்று கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சாதனை செய்வதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்று கூறும் வகையில் நீச்சல் போட்டியில் பல வெற்றிகளைக் கண்டு அசத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசின் உதவியோடு வேலை வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார் சுந்தரபாண்டியன். இந்த நிலைமை அடங்குவதற்குள் இதே ஊரில் வசித்து வரும் கமலிஸ்ரீ கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தான் துவைத்த துணிகளை காய வைப்பதற்கு தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணியை காய வைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த கமலிஸ்ரீயை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த சிகிச்சை பலனில்லாமல் அவரது வலது கையை இழக்க நேரிட்டது.
இவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நிதி உதவியும் சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையான விஷயம். தற்போது தனது கைகளை இழந்து தவிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் கமலிஸ்ரீ போல் இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்றும் அதற்கு காரணமான உள்ள இந்த தாழ்வான மின் கம்பிகளை ஊரின் ஒதுக்குப்புறமாக கொண்டுசெல்ல மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.