2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
வல்லுநர்களுடன் பிரதமர் ஆலோசனை:
இந்த நிலையில், வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 11 ஆம் தேதி ( இன்று ) பொருளாதார நிபுணர்களை சந்தித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தவிர, நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி மற்றும் பிற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்ற தகவல் தெரிவிக்கின்றன.
பிரதமருடனான கூட்டத்தில் நிதி அமைச்சர் சீதாராமன், திட்ட அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் பொருளாதார நிபுணர்கள் சுர்ஜித் பல்லா மற்றும் அசோக் குலாட்டி மற்றும் மூத்த வங்கியாளர் கே.வி. காமத் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீண்டகாலத்திற்கான பட்ஜெட்:
2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மோடி 3.0 அரசாங்கத்தின், மிக நீண்ட காலத்துக்கானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது , 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான நீண்டகாலத்தை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜனாதிபதி திரௌபதி முர்மு, கடந்த மாதம் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையில், சீர்திருத்தங்களின் வேகத்தை விரைவுபடுத்துவதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால பார்வைக்கு பயனுள்ள ஆவணமாக இருக்கும் என்றும் கூறினார். நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் இந்திய தொழில்துறை தலைவர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் ஏற்கனவே விவாதங்களை நடத்தியுள்ளார்.
வரிச் சலுகை:
இக்கூட்டத்தில் நுகர்வை அதிகரிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க, சாமானிய மக்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என்று பல வல்லுநர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
2023-24ல் பொருளாதாரம் 8.2% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. முன்னதாக பிப்ரவரியில், மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சீதாராமன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.