சென்னையில் கடந்த ஏழு நாட்களாக, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.20க்கும், ஒரு லிட்டர் டீசல், ரூ.93.52க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஏழு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்து ரூ.99.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.99.38க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்“ இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பால் விலை குறைப்பு அன்று நள்ளிரவு முதல் அமலாகி, தமிழ்நாட்டில் மூன்று இலக்கத்தில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை மீண்டும் இரட்டை இலக்கத்தில் விற்கப்பட்டது. டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐமு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026க்குள் மேலும் ரூ.37000 கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்றார்.
மேலும், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. 2014ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி, 2021 மே மாதத்தில் லிட்டருக்கு ரூபாய் 32.9 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 216 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து வரிபங்கானது மற்ற மாநிலங்களைவிட குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.