சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.49-க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. பெட்ரோல் தொடர்ந்து 21 ஆவது நாளாக மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டீசலை பொறுத்தவரை தொடர்ந்து 22ஆவது நாளாக எந்த மாற்றமுமின்றி ரூபாய் 94.39 என்ற விலையிலே விற்கப்படுகிறது.


பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம்:


இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2014 முதல் தற்போது வரை பெட்ரோல் நுகர்வு விலையில் 40 சதவீத உயர்வு காணப்படுகிறது. ஆனால், இந்த காலகட்டங்களில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் 27 சதவீத விலை சரிந்துள்ளது. 




தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது முதல் (மே 2), தற்போது வரை கிட்டத்தட்ட 40 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.  


முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற