தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.80க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.72க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாட்டில் பல மாநிலங்களில் ரூபாய் 100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், கடந்த 2-ந் தேதி முதன்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரூபாய் 100ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் தொடர்கிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100.75க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டருக்கு 93.91க்கு விற்கப்படுகிறது.


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை ஏறி இறங்கும், அல்லது மாற்றமின்றி தொடரும். 




பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பலவற்றின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


இந்த விலை உயர்வை கண்டித்து அரசியல் கட்சிகள் சில போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. நேற்று, தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை தொட்டதை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாதிப்பை விளக்கும் வகையில் சைக்கிள் பயணமும் மேற்கொண்டார். 


 



இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ”கேப்டனின் ஆணைக்கு இணங்க தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருவதாகவும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதாக கூறிய பிரேமலதா விஜயகாந்த், பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகிய பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே போனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கான வரிகள் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இந்த வரிகளை குறைப்பது மத்திய மாநில அரசுகளின் கடமை. பெட்ரோல், டீசல் மீதான வரியை 33 சதவீகிதம் வரை உயர்த்தி இருக்கிறார்கள், உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது” என்றார்