தமிழ்நாடு அரசு பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியை ரூபாய் 3 குறைக்கப்பட்ட பிறகு, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 99.08-க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூபாய் 93.38-க்கு விற்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதமாக ரூபாய் 100க்கும் அதிகமாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை மாநில அரசின் வரி குறைப்பால் 100க்கும் கீழ் குறைந்தது. இந்த நிலையில், பெட்ரோல் விலை நேற்று 12 காசுகள் குறைந்து ரூபாய் 98.96க்கு விற்கப்பட்டது. டீசல் மீதான வரி குறைக்கப்படாததால் தமிழ்நாட்டில் டீசல் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரூபாய் 93.38-க்கு விற்கப்பட்டு வந்தது. நேற்று டீசல் விலை ரூபாய் 12 காசுகள் குறைந்து ரூபாய் 93.26-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி 98.96-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையும் எந்த மாற்றமுமின்றி ரூபாய் 93.38-க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிநிலையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.