2021 ஆகஸ்ட் மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி வசூலிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய ஜிஎஸ்டி வருவாய், கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட (86,449 கோடி ரூபாய்) 30 சதவீதம் அதிகமாகும். 2019-20ம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாத வருவாயான ரூ.98,202 கோடியுடன் ஒப்பிட்டாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாத வசூல் 14 சதவீதம் அதிகம். எனவே, தற்போதைய ஜிஎஸ்டி வருவாய், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட  அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.     

மேலும், 2021 ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய் (revenues from domestic transaction)(இறக்குமதி சேவைகள் உட்பட), கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 27 சதவீதம் அதிகமாகும். 

கொரோனா பொதுமுடக்கநிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. கொரோனா 2-ம் அலைக்குப்பின்பு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்தது.  இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது.  பொருளாதார வளர்ச்சியுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், போலி ரசீது மூலம் ஜிஎஸ்டி மோசடி ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று நிதி அமைச்சகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தது.   


 

இ- வே பில்:  

கொரோனா இரண்டாம் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், போக்குவரத்துகள் முடக்கப்பட்டன. தர்போது, தென் மாவட்டங்களில், அனைத்து வகையான போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இ வே பில் கட்டணங்களின் (E-Way bills) மொத்த மதிப்பீடு தொகை ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்துள்ளது.  

இருப்பினும் முக்கிய தொழில்களின் குறியீட்டு வளர்ச்சி (Core Sector Growth), ஆகஸ்ட் மாதத்துக்கான Purchasing Manufacturing Index குறைந்து காணப்படுகிறது. எனவே, பொருளாதார மீட்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   

 மாநிலம்  ஆகஸ்ட் 2020 ஆகஸ்ட் 2021 வளர்ச்சி விகிதம் 
மகாராஷ்டிரா  11,602 15,175

31%

ஓடிஸா  2,348 3,317 41%
குஜராத்  6,030 7,556 25%
தமிழ்நாடு  5,243 7,060 35%
கேரளா  1,229 1,612 31%
ஆந்திரப் பிரதேசம்  1,955 2,591 33%
உத்தரப் பிரதேசம்  5,098 5,946 17%
மத்தியப் பிரதேசம்   2,209 2,438

10%

மேற்கு வங்கம்  3,053 3,678

20%

கர்நாடகா  5,502 7,429 35%
       

தமிழ்நாடு, கர்நாடகா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தன் காரணமாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.