டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் இன்றுடன் நிறைவடந்தன. இறுதிநாள் நிகழ்வில் துப்பாக்கி சுடுதல் வீரர் அவனி லகேரா இந்திய அணியை முன்னடத்திச் சென்றார். இறுதி நாள் தரவரிசைப்படி மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் இந்திய வீரர்களைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி. அதில், 






’இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பான இடம் இருக்கும். 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் மேலும் பலதலைமுறைக்கு விளையாட்டு வீரர்களை விளையாட்டுக்கு ஊக்குவிக்கும். பாராலிம்பிக்கில் பங்கேற்ற எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன்.அவர்கள் உத்வேகத்தின் அடையாளம். இந்தியா அணி வென்ற  பதக்கங்களின் எண்ணிக்கை எங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. பயிற்சியாளர்களும் விளையாட்டு வீரர்களின் குடும்பங்களும் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பாராட்டுகிறேன்.  நான் முன்பு கூறியது போல,ஜப்பான் மக்கள் அவர்களது விருந்தோம்பலக்குப் பெயர் போனவர்கள் இந்தக் கொரோனா காலத்தில் ஒற்றுமையாக இருந்து மீண்டெழுந்ததற்கு அவர்கள் ஒலிம்பிக் மூலம் அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியிருக்கிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். 


முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு பாரா பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சுஹேஷ் யாத்திராஜ் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார். 


இந்நிலையில் இன்று அவர் இறுதி போட்டியில் இந்த பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். சுஹேஷ் யாத்திராஜ் இந்தப் பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் 1 வீரரை எதிர்த்து விளையாடுவதால் இப்போட்டி அவருக்கு நல்ல சவாலான ஒன்று என்று கருதப்பட்டது. இந்தப் போட்டியில்  தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுஹேஷ் யாத்திராஜ் அதன்பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார். 20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார்.


இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமிலும் சுஹேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும் அந்த கேமின் இறுதியில் பிரான்சு வீரர் லூகாஸ் 21-17 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடத்தப்பட்டது.  அதிலும் இரு வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். இறுதியில் பிரான்சு வீரர் லூகாஸ் 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் சுஹாஸ் யாத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு 8-வது வெள்ளிப்பதக்கமாகும்.